மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள்
சென்னை, சென்னை, நேதாஜி நகரைச் சேர்ந்தவர் சாகுல் அமீது, 30. இவர், தி.நகரில் சாலையோரத்தில் துணி வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி அப்ரீன் ரோசியா, 20. இவர்களுக்கு, ஒரு பெண் குழந்தை உள்ளது.கடந்த 2022 ஜூன் 17ல், இருவருக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையில் சாகுல் அமீது, அப்ரீன் ரோசியாவை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.ஆர்.கே.நகர் போலீசார் சாகுல் அமீதை கைது செய்தனர். விசாரணை, அல்லிகுளத்தில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில், நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி முன் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சாகுல் அமீது மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு ஆயுள் தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.