எம்.ஜி.எம்.,மில் 5 மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவைச்சிகிச்சை
சென்னை :மரபணு குறைப்பாட்டால் கல்லீரல் பாதித்த ஐந்து மாத குழந்தைக்கு, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து, எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனை டாக்டர்கள் மறுவாழ்வு அளித்துள்ளர். இதுகுறித்து, கல்லீரல் நோய்கள், உறுப்பு மாற்று சிகிச்சை மைய இயக்குனர் தியாகராஜன் சீனிவாசன் கூறியதாவது: கிருஷ்ணகிரியை சேர்ந்த பிறந்து ஐந்து மாதமே ஆன, 8 கிலோ கொண்ட குழந்தைக்கு, 'கிரிக்லர் - நஜார் சி சிண்ட்ரோம் வகை - 1' என்ற மரபணு பாதிப்பு கண்டறியப்பட்டது. இப்பாதிப்பால், நிரந்தர நரம்பியல் பாதிப்பு ஏற்படுவதுடன், கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டு, குழந்தையின் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும். இதற்கு, ஒளிசிகிச்சை போன்ற சில சிகிச்சை முறைகள் இருந்தாலும், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே நிரந்தர தீர்வாக உள்ளது. எனவே, குழந்தையின் தாயிடமிருந்து கல்லீரல் தானம் பெறப்பட்டது. 150 முதல் 180 கிராம் எடையுள்ள கல்லீரல் பகுதியை மட்டுமே குழந்தையின் உடல் ஏற்றுக்கொள்ளும் என்பதால், அறுவை சிகிச்சை சவலாக இருந்தது. நுணுக்கமான, '3டி' தொழில்நுட்பம் வாயிலாக, இதற்கான அறுவை சிகிச்சையை, டாக்டர்கள் ஸ்ரீகாந்த் தும்மாலா, சவுந்தரராஜன், தினேஷ் பாபு, நிவாஷ் சந்திரசேகரன் ஆகியோர் செய்தனர். இதன் பயனாக குழந்தை நலம் பெற்றுள்ளது. இந்த சிகிச்சைக்கு பின், குழந்தை வாழ்நாள் முழுதும் மருத்துவ கண்காணிப்பிலும், நோய் எதிர்ப்பு மருந்துகளை உட்கொள்வதும் அவசியம். இவ்வாறு அவர் கூறினார். ***