வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் நையப்புடைத்த பகுதிவாசிகள்
பேசின்பாலம், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் லங்குனு ராம், 40. சவுகார்பேட்டையில் உள்ள பட்டறையில் பணியாற்றி வரும் இவர், வழக்கம்போல பணி முடிந்து, நேற்று முன்தினம் இரவு, பேசின் பாலம் ரயில் நிலையம் எதிரே உள்ள பேருந்து நிறுத்தம் வழியாக நடந்து சென்றுள்ளார்.அப்போது, மூன்று பேர் லங்குனு ராமை மடக்கி, பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர் மறுக்கவே, அவரது கையில் இருந்த 'டிபன் பாக்ைஸ' பிடிங்கி, அவரது தலையில் தாக்கினர். மேலும், அவரது மொபைல் போனை பறித்தனர். இதை கவனித்த பகுதிவாசிகள் ஓடி வந்து, மர்ம நபர்களின் பிடியில் இருந்து லங்குனு ராமை மீட்டனர். வழிப்பறி திருடர்களை விரட்டி சென்றதில், ஒரு சிறுவன் பிடிபட்டான். அவனை நையப்புடைத்து, பேசின்பாலம் போலீசில் ஒப்படைத்தனர். தலையில் காயமடைந்த லங்குனு ராம், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.போலீசாரின் விசாரணையில், பிடிபட்டது வியாசர்பாடியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் என்பதும், நண்பர்களுடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரிந்தது. சிறுவனை, கெல்லீசில் உள்ள சிறார் சீர்திருத்த பள்ளியில் போலீசார் சேர்த்தனர்.