உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சூரசம்ஹார விழா/: அசுரனை வதம் செய்த முருகன்

சூரசம்ஹார விழா/: அசுரனை வதம் செய்த முருகன்

சென்னை: வடபழனி முருகன் கோவில் உட்பட சென்னையின் பல கோவில்களில் நேற்று சூரசம்ஹாரம் விழா கோலாகலமாக நடத்தப்பட்டது. வடபழனி முருகன் கோவில், கந்தசஷ்டி விழாவில், நேற்று மாலை 6:30 மணிக்கு அம்பாளிடம் வேல் பெற்று, சூரபத்மனை வதம் செய்ய முருக பெருமான் புறப்பட்டார். இரவு, சூரசம்ஹாரம் துவங்கியது. யானை, சிங்கம், ஆடு உள்ளிட்ட ரூபங்களில் வந்த சூரபத்மனை, முருகன் வேலால் வதம் செய்யும் காட்சி அரங்கேறியது. பின், மாமரமாக மாறிய சூரன், அதை பிளந்தபோது, சேவல், மயிலாக மாறி காட்சியளித்தார். அப்போது பெய்த மழைச்சாரலிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு, சுவாமியை தரிசித்தனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், பெசன்ட் நகர் அறுபடைவீடு முருகன் கோவில், கந்தக்கோட்டம், மாடம்பாக்கம், குன்றத்துார், திருப்போரூர், வல்லக்கோட்டை ஆகிய முருகன் கோவில்களிலும், கந்தசஷ்டி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. குன்றத்துார் முருகன் கோவிலில் நேற்று மாலை, குதிரை வாகனத்தில் எழுந்தருளிய முருகன், சூரபத்மனை வதம் செய்தார். இவ்விழா ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைகண்ணன், அறங்காவலர்கள் சரவணன், குணசேகர், சங்கீதா, ஜெயகுமார், கோவில் செயல் அலுவலர் ஸ்ரீகன்யா ஆகியோர் செய்திருந்தனர். மொய் எழுதலாம் இன்று, வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. திருமண நிகழ்வு முடிந்ததும் முருக பெருமானுக்கு மொய் எழுத பக்தர்கள் அழைக்கப்படுகின்றனர். மொய் எழுதும் தொகைக்கான ரசீது, பிரசாதம் வழங்கப்படவுள்ளது. இரவு 8:00 மணிக்கு திருமண விருந்து அளிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி