மாடம்பாக்கம் நில தொகுப்பு திட்டம் கருத்து கேட்பு கூட்டத்தில் எதிர்ப்பு
தாம்பரம்,மாடம்பாக்கம், நுாத்தஞ்சேரி, பதுவஞ்சேரி, கோவிலாஞ்சேரி, அகரம்தென் ஆகிய பகுதிகளில், நில தொகுப்பு திட்டத்தின் கீழ், 620 ஏக்கர் நிலத்தை மேம்படுத்த, சி.எம்.டி.ஏ., திட்டமிட்டு உள்ளது.இதற்காக, நில உரிமையாளர்களுடன் கருத்து கேட்பு கூட்டம், அகரம்தென் பகுதியில் நேற்று நடந்தது. இதில், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், தாம்பரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜா மற்றும் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில், நில தொகுப்பு திட்டத்தின் கீழ், 620 ஏக்கர் நிலத்தை மேம்படுத்துவது குறித்து, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் விளக்கினர். அதற்கு, 'விவசாய நிலத்தை, விவசாயத்திற்காகவே பயன்படுத்துகிறோம். எங்களுக்கு இத்திட்டம் தேவையில்லை' என, பெரும்பாலான விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.பதுவஞ்சேரி விவசாயி ஸ்ரீபதி, 56, கூறியதாவது:மாடம்பாக்கம், நுாத்தஞ்சேரி, பதுவஞ்சேரி, கோவிலாஞ்சேரி, அகரம்தென் ஆகிய பகுதிகளில் உள்ள 620 ஏக்கர் விவசாய நிலத்தை, சி.எம்.டி.ஏ., மேம்படுத்தி தருவதாக கூறுகிறது.சாலை, கால்வாய், மின் விளக்கு, மனைப்பிரிவு அனுமதி போன்ற மேம்பாட்டு பணிகளை செய்து கொடுப்பதாக கூறுகின்றனர்.நிலத்தில், 40 சதவீத நிலத்தை சாலை, கால்வாய் போன்ற பணிகளுக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும், 60 சதவீத நிலத்தை திருப்பி ஒப்படைக்கப்படும் எனவும் கூறுகின்றனர். அதில் எங்களுக்கு உடன்பாடில்லை.விவசாய நிலத்தை விவசாயம் செய்யவே விரும்புகிறோம். எங்களுக்கு அத்திட்டம் தேவையில்லை.இவ்வாறு அவர் கூறினார்.காலியாக உள்ள தனியார் நிலங்கள் மொத்தமாக தொகுக்கப்பட்டு, திட்டமிட்ட நகர்ப்புற பகுதியாக மேம்படுத்தவும், தரமான சாலை, பூங்காக்கள் என, அனைத்து வசதிகளும் அடங்கிய மனைப்பிரிவுகள் ஏற்படுத்தவும், இந்த திட்டத்தை சி.எம்.டி.ஏ., செயல்படுத்த உள்ளது.