பால் உற்பத்தி ஆலை அமைக்க மாதவரம் குடியிருப்பு மக்கள் எதிர்ப்பு
மாதவரம்:மாதவரம் குடியிருப்பு பகுதியில் பால் உற்பத்தி ஆலை மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளதற்கு, குடியிருப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள் உள்ளனர். மாதவரம் மண்டலத்தின், 25 மற்றும் 26வது வார்டில் உள்ள அலெக்ஸ் நகர் அருகே, ஆவின் பால்பண்ணைக்கு சொந்தமான நிலம் உள்ளது. நாளொன்றுக்கு, 10 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யும் ஆலையும், அதனுடன் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும் அமைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள் கூறியதாவது: பால் உற்பத்தி ஆலை அமைய உள்ளதாக கூறப்படும் இப்பகுதியை சுற்றி, 20க்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளன; 20,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். ஆலை வாயிலாக, 10 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்தால், தினமும் 30 லட்சம் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும். இதனால், நிலத்தடி நீர் தட்டுப்பாடு ஏற்படும். இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தால், குடியிருப்புவாசிகளுக்கு சுவாச கோளாறு ஏற்படும். இது தொழிற்பேட்டை பகுதி கிடையாது. குடியிருப்புகள் நிறைந்த பகுதி. பொதுமக்களிடம் கருத்து கேட்காமல், ஆலை மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிடுவது தான்தோன்றி தனமாக உள்ளது. குடியிருப்பு சங்கங்களின் வாயிலாக, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பல்வேறு முறை மனுக்கள் வழங்கப்பட்டுவிட்டன. எனினும், அவர்கள் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் உறுதியாக இருக்கின்றனர். ஏற்கனவே, மாதவரத்தில் உள்ள பால் பண்ணை அருகே, பால் பண்ணைக்கு சொந்தமாக, 800 ஏக்கர் நிலம் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இந்த திட்டத்தை அங்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.