ரூ.3 கோடி நிலத்தை அபகரித்து அடுக்குமாடி வீடு கட்டியவர் கைது
சென்னை: மாதவரத்தில், 3 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அபகரித்து, அடுக்குமாடி வீடு கட்டியவர் கைது செய்யப்பட்டார். கொளத்துார், பூங்கா நகரைச் சேர்ந்தவர் பிரியங்கா, 30; நகைப்பட்டறை உரிமையாளர். இவருக்கு மாதவரம், பொன்னியம்மன்மேடு, தணிகாச்சலம் நகரில், 2,134 சதுரடி காலி மனை உள்ளது. அந்த இடம், போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்டதோடு, இரண்டு அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதையறிந்த பிரியங்கா, சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த நில மோசடி புலனாய்வு பிரிவு போலீசார், விசாரணை மேற்கொண்டனர். இதில், போலி ஆவணங்களால் மனையை அபகரித்து அடுக்குமாடி குடியிருப்பு கட்டியது, கொளத்துாரைச் சேர்ந்த சந்திரன், 58, என்பது தெரியவந்தது. நேற்று அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட சந்திரன், திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவ கல்லுாரியில் 'சீட்' வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில், ஏற்கனவே கைது செய்யப்பட்டவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.