முதியோர் உதவி தொகை வாங்கி தருவதாக ஏமாற்றியவர் கைது
அசோக் நகர், மேற்கு மாம்பலம், கணபதி தெருவைச் சேர்ந்தவர் மூதாட்டி சூரி, 70; பூ வியாபாரி.கடந்த 1ம் தேதி மாலை, மேற்கு மாம்பலத்திற்கு வந்த வெள்ளை தொப்பி அணிந்த மர்ம நபர், சூரியிடம் பேச்சுக்கொடுத்தார். முதியோர் உதவித்தொகையாக மாதம் 1,000 ரூபாய் வாங்கி தருவதாக கூறியுள்ளார்.அதற்கு, மொபைல் போனில் தங்களை வீடியோ எடுக்க வேண்டும் என்றும், நகையுடன் இருந்தால் உதவித்தொகை கிடைக்காது எனவும் கூறி, மூதாட்டி அணிந்திருந்த 4 கிராம் மதிப்பு கம்மல், மூக்குத்தியை கழற்ற வைத்து உள்ளார். இதையடுத்து நகையை வாங்கிய அந்த நபர், மூதாட்டியை திசை திருப்பி அங்கிருந்து தப்பிச்சென்றார்.அசோக் நகர் போலீசில் மூதாட்டி சூரி, தன் பேரன் தனுஷ், 22, உடன் சென்று புகார் அளித்தார். அப்பகுதி கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை வைத்து, மர்ம நபரான வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஷேக் ஆயூப், 37, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 கிராம் நகையை பறிமுதல் செய்தனர். ஷேக் ஆயூப் மீது, ஏழு குற்ற வழக்குகள் உள்ளன.