அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1.65 கோடி சுருட்டியவர் கைது
சென்னை, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பகவதியப்பன், 52. இவரது மகனுக்கு மத்திய, மாநில அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக, சென்னை, அரும்பாக்கம் 'தியா என்டர்பிரைசஸ்' என்ற நிறுவனம் நடத்தி வந்த, ஹரிஹரகுமார், 52, என்பவர் கூறியுள்ளார்.அவரது பேச்சை நம்பிய பகவதியப்பன், 15 லட்சம் ரூபாயை ஹரிஹரகுமாரிடம் கொடுத்துள்ளார்.பணத்தை வாங்கிக் கொண்ட ஹரிஹரகுமார், வாக்குறுதி அளித்தபடி வேலை வாங்கி தராமலும், வாங்கிய பணத்தை திருப்பி தராமலும் அலைக்கழித்து வந்துள்ளார்.இதுகுறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவின் வேலை வாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவில் புகார் அளித்தார்.அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், கோயம்பேடு பகுதியில் வசிக்கும் ஹரிஹரகுமார், புகார்தாரர் உட்பட, 18 பேரிடம், 1.65 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது தெரிந்தது.நேற்று அவரை கைது செய்த போலீசார், அவரது வங்கிக் கணக்குகளை முடக்கினர்.