உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஹோட்டலில் ரூ.28 லட்சம் கையாடல் செய்தவர் கைது

ஹோட்டலில் ரூ.28 லட்சம் கையாடல் செய்தவர் கைது

சென்னை, அண்ணா சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், 28.13 லட்சம் ரூபாயை கையாடல் செய்து, வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று சென்னை திரும்பியவரை போலீசார் நேற்று கைது செய்தனர். ஆயிரம்விளக்கு பகுதியைச் சேர்ந்தவர் பர்வேஷ் நிசார் தாமத், 40. அவர், அண்ணா சாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில், பொது மேலாளராக பணிபுரிந்து வருகிறார். ஹோட்டல் வரவு, செலவு கணக்குகளை சரிபார்த்தபோது, மேலாளர் பிரபு என்பவர், 28.13 லட்சம் ரூபாய் கையாடல் செய்ததை கண்டறிந்தார். இதுகுறித்து, பர்வேஷ் நிசார் தாமத், ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில், கையாடலில் ஈடுபட்ட கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பிரபு, 29, தாய்லாந்து நாட்டின் தலைநகர் 'பாங்காக்'கில் இருப்பது தெரிய வந்தது. அவர், தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக, சென்னை போலீசாரால் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், பாங்காக்கில் இருந்து நேற்று சென்னை திரும்பிய பிரபுவை, குடியுரிமை அதிகாரிகள் பிடித்து, சென்னை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம், ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தினர். வாடிக்கையாளர்கள் ஹோட்டலில் செலுத்தும் கட்டணத்தை, பிரபு தன் வங்கி கணக்கில் செலுத்தக் கூறியதோடு, ரொக்கமாக பெறும் பணத்தை அவரே வைத்துக் கொண்டதும் தெரிந்தது. இதையடுத்து, பிரபுவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து இரண்டு மொபைல் போன்கள், வங்கி சேமிப்பு அட்டை மற்றும் இருசக்கர வாகனம் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை