கான்கிரீட் கட்டிங் பிளேடுகள் போலியாக தயாரித்தவர் கைது
சவுகார்பேட்டை:பிரபல நிறுவனங்களின் பெயரை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட, ஏழு லட்சம் ரூபாய் மதிப்பிலான, கான்கிரீட் உடைக்கும் போலி பிளேடுகள் பறிமுதல் செய்யப் பட்டன. 'கார்போரண்டன் யுனிவர்சல் லிமிடெட்' என்ற நிறுவனத்தின் பெயரில் விற்பனையாகும், கான்கிரீட், செங்கல், மரம் அறுக்கும் பிளேடுகள் தரமற்று இருப்பதாக புகார்கள் எழுந்தன. விசாரணையில் அவை போலி என கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில், போலி பிளேடுகளை தயாரித்து விற்பனை செய்யும், நபர்களை கண்டறியும் பொருட்டு, அயனாவரத்தில் உள்ள அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில், சவுகார்பேட்டை, ஆதியப்பன் நாயக்கன் தெரு, சோமசுந்தரம் தெருவில், கான்கிரீட் அறுக்கும் பிளேடுகள், தனியார் நிறுவனத்தின் பெயரில் போலியாக தயாரிப்பது தெரியவந்தது. நேற்று காலை, சவுகார்பேட்டையில் உள்ள தனியார் கிடங்கில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, போலியாக பிளேடுகள் தயார் செய்யப்பட்டு, தனியார் நிறுவனத்தின் ஸ்டிக்கர் ஒட்டி, சந்தையில் விற்பனை செய்தது உறுதிப்படுத்தப்பட்டது. கிடங்கில் இருந்த, ஏழு லட்சம் ரூபாய் மதிப்பிலான 7,000 போலி பிளேடுகளை, அறிவுசார் அமலாக்கப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, வடமாநிலத்தைச் சேர்ந்த நரேஷ்குமார், என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.