சிறையில் வாய்த் தகராறில் ஈடுபட்ட நண்பரை வெளியே வந்த பின் போட்டுத் தள்ளிய நபர் கைது
திருவொற்றியூர்: திருவொற்றியூர் சந்தையில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவொற்றியூர், ஏகவல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜோதிலிங்கம். இவர், திருவொற்றியூர் சந்தையில் உள்ள டீக்கடையில் பணிபுரிகிறார். இவரது மகன், லோகேஷ் என்ற யோகேஸ்வரன், 28. இவர் மீது, பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. தந்தையை பார்ப்பதற்காக, நேற்று முன்தினம் இரவு லோகேஷ் திருவொற்றியூர் சந்தைக்கு சென்றிருந்தார். அப்போது, அவரை பைக்கில் பின் தொடர்ந்த நான்கு பேர் கும்பல், அரிவாள், கத்தியால் அவரை சரமாரியாக வெட்டி தப்பியது. பலத்த காயமடைந்த லோகேஷ், ரத்த வெள்ளத்தில் சரிந்து அங்கேயே உயிரிழந்தார். சம்பவம் நடந்த இடம், சந்தை பகுதி என்பதால், அதிர்ச்சி மற்றும் பீதியில் உறைந்த வியாபாரிகள், கடைகளை அவசரமாக மூடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் பாஸ்கரன் மற்றும் திருவொற்றியூர் போலீசார் லோகேஷின் உடலை, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். 3 பேர் சரண் இந்தநிலையில், கொலையில் தொடர்புடைய, புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கமல்பாய், 26, கொடுங்கையூரைச் சேர்ந்த ஆனந்த், 34, எண்ணுார், சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த தீபக், 23, உள்ளிட்ட மூவரும், நேற்று மாலை, வழக்கறிஞர் மூலம், திருவொற்றியூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். விசாரணையில், கொலையான லோகேஷ் மற்றும் கொலையாளி கமல்பாய் ஆகிய இருவரும், வெவ்வேறு வழக்குகளில் புழல் சிறையில் இருந்தபோது, வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக, லோகேஷ் தன்னை கொலை செய்து விடுவான் என்ற பயத்தில், தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து, அவனை கொலை செய்ததாக கமல்பாய் வாக்குமூலம் அளித்துள்ளார். விசாரணைக்கு பின், மூவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.