கத்தி முனையில் மொபைல் போன் பறித்தவர் கைது
சென்னை :சாலையில் நடந்து சென்ற மாநகராட்சி ஊழியர் உட்பட இருவரிடம், கத்தி முனையில் மொபைல் போன் பறித்து தப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் ஷாநவாஸ், 34; சென்னை மாநகராட்சியில் கொசு மருந்து அடிக்கும் வேலை செய்து வருகிறார். கடந்த, 9ம் தேதி நண்பர் ராஜசேகருடன், சேப்பாக்கம் விக்டோரியா விடுதி சாலையில் நடந்து சென்றார். அப்போது, ஆட்டோவில் வந்த மர்ம நபர், திடீரென இருவரையும் வழிமறித்து, கத்தி முனையில், அவர்களது மொபைல் போனை பறித்து தப்பிச் சென்றார்.சம்பவம் குறித்து வழக்கு பதிந்து, திருவல்லிக்கேணி போலீசார் நடத்திய விசாரணையில், சூளையை சேர்ந்த சிலம்பரசன், 29 என்பவர், மொபைல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.நேற்று அவரை கைது செய்த போலீசார், இரு மொபைல்போன், ஆட்டோ மற்றும் கத்தியை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சிலம்பரசன், பழைய குற்றவாளி என்பதும், அவர் மீது ஏற்கனவே, ஒன்பது குற்ற வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.