வாடகை தராத நிறுவனத்தினரை துப்பாக்கியுடன் மிரட்டியவர் கைது
கிண்டி,:வாடகை பாக்கி தராததால், தனியார் நிறுவனத்தில் புகுந்து ஊழியர்களை துப்பாக்கி காட்டி மிரட்டிய நபரை போலீசார், கைது செய்தனர்.வேளச்சேரி பிரதானசாலை, ஹரினி அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் வித்யலதா, 85. இவர் முதல் மாடியில் தங்கி உள்ளார்.தரை தளத்தை, சண்முகம், 45, என்பவருக்கு, 'பேன்பவர் கிளீனிங்' நிறுவனம் நடத்த, மாதம் 35,000 ரூபாய் வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிறுவனம், நான்கு ஆண்டுகளாக செயல்படுகிறது.வித்யலதா, முதுமை காரணமாக சில மாதங்களுக்கு முன் வீட்டை காலி செய்து, கூடுவாஞ்சேரியில் உள்ள முதியோர் இல்லத்தில் தங்கி உள்ளார்.இவரது கட்டடத்தை கவனித்து, நிறுவனத்திடம் இருந்து வாடகை பணம் வாங்க, உறவினரான ஆந்திரா மாநிலம், களக்காடா பகுதியைச் சேர்ந்த மதுசூதன், 62, என்பவரிடம் ஒப்படைத்துள்ளார்.நிறுவனம், மூன்று மாதங்களாக வாடகை பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, 4ம் தேதி, நிறுவனத்திற்கு சென்ற மதுசூதன், நிறுவன மேலாளர் மகேந்திரன், 29, ஊழியர் சர்க்கரேஸ்வரன், 54, ஆகியோரை மிரட்டி, வாடகை கேட்டுள்ளார்.அதற்கு ஊழியர் சர்க்கரேஸ்வரன், ''உரிமையாளர் வெளியூர் சென்றுள்ளார். வந்தபின் கேளுங்கள்'' என கூறியதும், காரில் இருந்த துப்பாக்கியை எடுத்து வந்து, அவரது தலையில் வைத்து, 'அனைவரும் வெளியே சென்றுவிடுங்கள், இல்லையென்றால் சுட்டுவிடுவேன்' என மிரட்டி உள்ளார்.இந்நிலையில், சென்னை திரும்பிய சண்முகம், கிண்டி போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். போலீசார், நிறுவனத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, துப்பாக்கியை காட்டி மிரட்டியது தெரிந்தது. இதையடுத்து நேற்று, மதுசூதனை கைது செய்த போலீசார், ஆறு தோட்டாக்களுடன் துப்பாக்கி மற்றும் ஒரு வாகனத்தை பறிமுதல் செய்தனர்.