போக்குவரத்து கழக பணிமனையில் மேலாளர்கள் கட்டிப்புரண்டு சண்டை
சென்னை, மாநகர போக்குவரத்து கழகத்தின், வடபழனி பணிமனையில், கிளைமேலாளர், உதவி கிளைமேலாளர் இருவரும், கட்டிபுரண்டு சண்டை போட்டுக் கொண்டனர். கிளை மேலாளருக்கு மூக்கில் காயம் ஏற்பட்டது.வடபழனி போக்குவரத்து பணிமனையில் இருந்து, பல்வேறு வழித்தடங்களில் தினமும், 150 மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பணிமனையின் கிளை மேலாளராக செந்தில்குமார், உதவி கிளை மேலாளராக மாறன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.பணிமனையில் பணியாளர்களுக்கு பணி ஒதுக்குவதில், இருவருக்கும் நேற்று வாய் தகராறு ஏற்பட்டது. மாறி, மாறி பேசி கொண்ட நிலையில், செந்தில்குமார், மாறனை ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த மாறன், செந்தில்குமாரை தாக்கி உள்ளார். இருவரும் மாறி, மாறி கட்டிபுரண்டு சண்டை போட்டுக் கொண்டனர். இதில், செந்தில்குமாருக்கு மூக்கில் லேசாக காயம் ஏற்பட்டு, முதலுதவி சிகிச்சை பெற்றார். மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் வந்து, இருவரையும் சமாதானம் செய்தனர். இருப்பினும், அவர்கள் சமாதானம் ஆகவில்லை. இந்த சம்பவம் குறித்து, வடபழனி போலீசார் வழக்கு பதிந்து, இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். பணியில் உள்ளோரை, கிளை மேலாளர் ஒருமையிலும், மரியாதை குறைவாகவும் பேசி வந்ததால்தான், இந்த சண்டை ஏற்பட்டதாக, பணிமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.