மணலி மண்டலம் பிரிக்கப்படாது * மேயர் பிரியா திட்டவட்டம்
மணலி, ''மணலி மண்டலம் தற்போதைக்கு பிரிக்கப்படாது,'' என, சென்னை மேயர் பிரியா தெரிவித்தார். மணலி மண்டலத்தில், வளர்ச்சிப் பணிகள் குறித்து, சென்னை மேயர் பிரியா, கமிஷனர் குமரகுருபரன் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.மணலியில், 'அம்ரூட் 2.0' திட்டத்தின் கீழ், 4.73 கோடி ரூபாயில் மணலி ஏரி புனரமைக்கப்பட்டு வருகிறது. மேல் நிலைப் பள்ளி வளாகத்தில், 2.20 கோடி ரூபாய் செலவில் அறிவுசார் மையம்; அம்பேத்கர் தெருவில், 7.5 கோடி ரூபாயில் சமுதாய நலக்கூடம்;காமராஜர் சாலையில், 75 லட்ச ரூபாயில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி, ஆசிய வளர்ச்சி வங்கியின், 58.33 கோடி ரூபாய் நிதியில், கடப்பாக்கம் ஏரி புனரமைத்தல் ஆகிய பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை பார்வையிட்டு, மேயரும், கமிஷனரும் ஆய்வு செய்தனர்.ஆய்வின்போது, துணை கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, வடக்கு வட்டார துணை கமிஷனர் கட்டா ரவி தேஜா, திருவொற்றியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., - கே.பி சங்கர், மணலி மண்டல குழு தலைவர் ஏ.வி ஆறுமுகம், மண்டல செயற்பொறியாளர் தேவேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.பின், மேயர் பிரியா அளித்த பேட்டி : மணலி ஏரி பணிகளை ஜூலைக்கு முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இங்குள்ள 21 வது வார்டில் இருப்பது, அ.தி.மு.க., கவுன்சிலர் என்றாலும், மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் கட்டடங்கள், சமுதாய நல கூடம் அமைத்தல் உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அ.தி.மு.க., ஆட்சியில் விரிவாக்க பகுதிகளில் எந்த பணிகளையும் செய்யப்படவில்லை. கவுன்சிலர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வார்டில், வளர்ச்சி பணிகளில் எந்த பாதிப்பு இருக்காது. மண்டல குழு தலைவர் மற்றும் அதிகாரிகள் வாயிலாக, அந்த பணிகள் மேற்கொள்ளப்படும். மணலி மண்டலம் பிரிப்பு நடவடிக்கை தற்போது நடைமுறைக்கு வராது. அடுத்த உள்ளாட்சி தேர்தலில் வரலாம். அதுகுறித்து, அமைச்சர் முடிவெடுப்பார். சடையங்குப்பம் - பர்மா நகர் பகுதிகள், புழல் உபரி நீரால் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில், தடுப்பு சுவர் அமைக்கும் பணிக்கான ஆய்வை, நீர்வளத்துறை மேற்கொண்டு வருகிறது. சென்னை மாநகராட்சி சார்பில், அதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்படும். இவ்வாறு, அவர் பேசினார். ***