உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை மராமத்து பணிகளுக்கு மூடல்

மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை மராமத்து பணிகளுக்கு மூடல்

திருவொற்றியூர் திருவொற்றியூர், மாணிக்கம் நகர் - அம்பேத்கர் நகரை இணைக்கும் வகையில், ரயில்வே தண்டவாளங்களின் கீழ் சுரங்கப்பாதை உள்ளது. இது, 20 ஆண்டுகள் பழமையானது. இந்த சுரங்கப்பாதை, கான்கிரிட் பூச்சுகள் உதிர்ந்தும், தரை பகுதி பெயர்ந்தும் பலவீனமாக காட்சியளிக்கிறது. தவிர, ஆண்டின் அனைத்து நாட்களிலும், ஊற்று நீர் சுரப்பால் தண்ணீர் தேங்கியபடி இருக்கும்.மழை காலங்களில், 5 - 6 அடிக்கு மழைநீர் தேங்கி விடுவதால், சுரங்கப்பாதை மூடப்படும். எனவே, பல ஆண்டுகளாகி விட்ட சுரங்கப்பாதையை சீரமைத்துக் கொடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.அதன்படி, முன்னாள் தி.மு.க., கவுன்சிலர் சொக்கலிங்கமும், மண்டல குழுவில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தார்.அதன் தொடர்ச்சியாக, வடக்கு வட்டார துணை கமிஷனர் கட்டா ரவிதேஜா, சுரங்கப்பாதையை ஆய்வு செய்தார்.பின், புனரமைக்க முடிவு செய்யப்பட்டு, சென்னை மாநகராட்சி - பாலங்கள் துறை சார்பில், மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக தெரிகிறது.அதன்படி, சுரங்கப்பாதை மராமத்து பணிகளுக்காக மூடப்படுவதற்கான அறிவிப்பு பேனர்கள், சுரங்கப்பாதையின் இருபுறமும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், எப்போது பணி துவங்கும்; எப்போது முடியும் என, தெளிவாக குறிப்பிடப்படவில்லை.இது குறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:சுரங்கப்பாதை பலவீனத்தால், புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. பள்ளிக் கல்லுாரிகளுக்கான கோடை விடுமுறையிலேயே, இப்பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.ஒரு மாத காலம் பணிகள் நடக்கும் என தெரிகிறது. அதுவரை, மாற்று பாதையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ