மேடவாக்கம் சுகாதார நிலையத்தில் பணியாளர் பற்றாக்குறையால் அவதி
மேடவாக்கம், பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேடவாக்கத்தில், அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.இங்கு, தினமும் 300 முதல் 400 நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். உள்நோயாளிகளுக்கு, 30 படுக்கை வசதி உள்ளது.தவிர, மகப்பேறு, குழந்தைகள் நலன் உள்ளிட்ட சிறப்பு சிகிச்சையும், சித்த மருத்துவத்திற்கு தனி பிரிவும் இங்கு உள்ளது. மேலும், இரண்டு ஆம்புலன்ஸ்கள் உள்ளன.கொரோனா தொற்றுக்கு முன், இம்மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் என, 90 பேர் பணியாற்றினர்.நான்கு ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு, தற்போது 60 பணியாளர்களே உள்ளனர். இவர்களை வைத்தே, மருத்துவமனை இயங்கி வருகிறது.இதனால், நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருப்பதும், அவசர சிகிச்சையை உடனே மேற்கொள்வதில் தாமதமும் ஏற்படுவதாக, சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:கொரோனாவிற்கு முன், இந்த மருத்துவமனையில், 'சிசேரியன்' மற்றும் சுகப்பிரசவம் என, மாதம் 80 பிரசவங்கள் பார்க்கப்பட்டன.தவிர, காய்ச்சல், சளி உள்ளிட்ட நோய்களுக்கு, 400 பேர் வெளிநோயாளியாக வந்து சிகிச்சை பெற்று செல்வர்.கொரோனாவிற்கு பின், இம்மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர், உதவியாளர்கள் என, 30க்கும் மேற்பட்டோர், பிற அரசு மருத்துவமனைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.தற்போது, இம்மருத்துவமனையில் ஒரு ஆம்புலன்ஸ் உள்ளது. நான்கு ஓட்டுநர்கள் இருக்க வேண்டும். ஆனால், ஒருவர் கூட இல்லை. அவசரம் என்றால், தற்காலிகமாக ஓட்டுநரை நியமித்து, ஆம்புலன்ஸ் இயக்கப்படுகிறது.மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லாததால், நோயாளிகள் குறித்த நேரத்தில் சிகிச்சை பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது.ஐந்து ஏக்கர் பரப்பில் உள்ள இந்த சுகாதார மையத்திற்கு, இரண்டு துாய்மை பணியாளர்கள் மட்டுமே உள்ளனர்.போதிய டாக்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பினால், நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.