உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மெட்ரோ கிரேன் கம்பி அறுந்து விபத்து 50 அடி உயரத்தில் இருந்து விழுந்தவர் பலி

மெட்ரோ கிரேன் கம்பி அறுந்து விபத்து 50 அடி உயரத்தில் இருந்து விழுந்தவர் பலி

சோழிங்கநல்லுார்,மேடவாக்கம் - -சோழிங்க நல்லுார் சாலையில் நடந்த மெட்ரோ திட்டப் பணியில், மெட்ரோ துாண் மீது 'கான்கிரீட் பாக்ஸ்' நிறுவ முயன்றபோது, கிரேன் கம்பி அறுந்து, 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த இரு வடமாநில தொழிலாளர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொருவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேடவாக்கம் - -சோழிங்க நல்லுார் இடையே செம்மொழி சாலையில் மெட்ரோ துாண்கள் மீது, 'கான்கிரீட் பாக்ஸ்' பொருத்தும் பணி நடந்து வருகிறது. இதில், வடமாநில தொழிலாளர்கள் பலர் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று அதிகாலை, 30 டன் 'கான்கிரீட் பாக்ஸ்' ஒன்றை, ராட்சத கிரேன் உதவியுடன், 50 அடி உயர துாணின் மேல் பொருத்த முயன்றனர். அந்த கான்கிரீட் பாக்சுடன் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிக்கிகுமார் பஸ்வான், 23, சந்தோஷ் லோரா, 23, ஆகியோர் மேலே சென்றனர். கான்கிரீட் பாக்ஸ் துாணின் உச்சிக்கு சென்ற போது, திடீரென கிரேனின் கம்பி அறுந்து கான்கிரீட் பாக்ஸ் கீழே கவிழ்ந்தது. இதில், பாக்ஸ் மீது அமர்ந்திருந்த இருவரும், 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தனர். இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே பிக்கிகுமார் பஸ்வான் பலியானார். படுகாயமடைந்த சந்தோஷ் லோரா, உயிருக்கு ஆபத்தான நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து, பிக்கிகுமார் பஸ்வான் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்கு பதிந்து, மெட்ரோ ரயில் பணியின் சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவன பொறுப்பாளர், மேலாளர், கட்டுமான மேலாளர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மெட்ரோ ரயில்வே நிர்வாகமும் விசாரணையை துவக்கியுள்ளது. கடந்த ஜூன் மாதம், ராமாபுரத்தில் மெட்ரோ திட்டப் பணியின்போது, துாண்களை இணைக்கும் கர்டர் விழுந்ததில், சாலையில் சென்ற போரூர், காட்டுப்பாக்கத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர், உடல் நசுங்கி உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை