மெட்ரோ ரயில் பயண அட்டை விற்பனை ஏப்., 1 முதல் நிறுத்தம்
சென்னை,'மெட்ரோ ரயில் பயண அட்டை விற்பனை, முதற்கட்டமாக, 11 மெட்ரோ ரயில் நிலையங்களில், ஏப்., 1 முதல் நிறுத்தப்படும்' என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயிலில் பயணிக்க, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன பயண அட்டையுடன், கூடுதலாக கடந்த 2023 ஏப்., 14ல், 'சிங்கார சென்னை அட்டை' அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அட்டை, ஏப்., 1 முதல் முழு பயன்பாட்டிற்கு வருகிறது.இதன் காரணமாக, 41 மெட்ரோ ரயில் நிலையங்களிலும், படிப்படியாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்பட உள்ளது.முதற்கட்டமாக, புது வண்ணாரப்பேட்டை, காலடிப்பேட்டை, திருவொற்றியூர் தேரடி, திருவொற்றியூர், நந்தனம், சின்னமலை, ஓ.டி.ஏ., -நங்கநல்லுார் சாலை, மீனம்பாக்கம், எழும்பூர், கீழ்ப்பாக்கம், செனாய் நகர் ஆகிய, 11 மெட்ரோ ரயில் நிலையங்களில் நிறுத்தப்படுகிறது.இந்த ரயில் நிலையங்களில், பயண அட்டையை ரீசார்ஜ் செய்ய திட்டமிட்டு உள்ள பயணியர், பயண அட்டையில் உள்ள மீதித் தொகையை ஏப்., 1க்குள் பயன்படுத்திக் கொள்ளலாம்.அதன்பின், மெட்ரோ ரயில்களில் பயணிக்க, வாகன நிறுத்தம் செய்ய, 'சிங்கார சென்னை அட்டை' பெற்று பயன்படுத்தும்படி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. அனைத்து போக்குவரத்துக்கும் சிங்கார சென்னை அட்டை பயன்படுத்த வழிவகை செய்யப்படுவதால், இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
பார்க்கிங்
மாத பாஸ் கிடையாதுமெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்தும் இடங்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், வரும் பிப்., 1 முதல், வாகனம் நிறுத்தத்திற்கான மாதாந்திர பார்க்கிங் பாஸ்கள் வழங்குவது நிறுத்தப்படுகிறது. அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், வாகனம் நிறுத்தும் இடங்கள் இனி பயன்படுத்தப்படும். வாகனம் நிறுத்த ஏற்கனவே வாங்கப்பட்ட மாதாந்திர பார்க்கிங் பாஸ்கள், அவற்றின் செல்லுபடியாகும் காலம் முடியும் வரை அனுமதிக்கப்படும் என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.