உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சீரமைத்த குழாய் ஒரே நாளில் பழுது சகதியாக மாறிய எம்.ஜி.ஆர்., சாலை

சீரமைத்த குழாய் ஒரே நாளில் பழுது சகதியாக மாறிய எம்.ஜி.ஆர்., சாலை

தரமணி, கிண்டி, வேளச்சேரி, ஆதம்பாக்கம், பரங்கிமலை, நங்கநல்லுார் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தோர், தரமணி, எம்.ஜி.ஆர்., சாலை வழியாக, ஓ.எம்.ஆரில் உள்ள ஐ.டி., நிறுவனங்களுக்கு செல்கின்றனர். ஓ.எம்.ஆரில் இருந்து கிண்டி நோக்கி செல்வோரும், இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.இதனால், எம்.ஜி.ஆர்., சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்த சாலையில், நான்கு நாட்களுக்கு முன், குடிநீர் குழாய் பழுதடைந்து, சீரமைக்கப்பட்டது. பின், பள்ளத்தை மண் கொட்டி மூடினர்.ஆனால், குழாய் பழுதை முறையாக சீரமைக்காததால், மறுநாள் காலை மீண்டும் குழாய் உடைந்து, குடிநீர் சாலையில் வெளியேறியது. இதனால், எம்.ஜி.ஆர்., சாலை சகதியாக மாறியதால், வாகன ஓட்டிகள் தடுக்கி விழுகின்றனர்.இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:எம்.ஜி.ஆர்., சாலையில் பள்ளம் தோண்டும் முன், எங்களிடம் அனுமதி பெற வேண்டும். அப்போது, போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பள்ளம் எடுத்தல், எடுத்த பள்ளத்தை வாகனங்கள் உள்வாங்காத வகையில் சீரமைத்தல் உள்ளிட்ட சில வழிகாட்டி நடைமுறைகளை கூறுவோம்.ஆனால், எங்களிடம் அனுமதி பெறாமல் சாலையில் பள்ளம் எடுக்கின்றனர். குடிநீர் அத்தியாவசிய தேவை என்பதால், அனுமதி பெறாமல் பள்ளம் எடுப்பதற்கு, நாங்கள் ஆட்சேபனை தெரிவிப்பதில்லை. ஆனால், பள்ளத்தை முறையாக சீரமைக்காததால், அடிக்கடி வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.பிரச்னை குறித்து, குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் பார்வைக்கு கொண்டு சென்றும், கீழ் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால், மக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.மண்டல குடிநீர் வாரிய அதிகாரி கூறியதாவது:குடிநீர், கழிவுநீர் குழாய்கள் திடீரென சேதமடைந்தால், அதை உடனே ஒப்பந்த நிறுவனத்திடம் பேசி சீரமைக்க, எங்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்படவில்லை.ஒவ்வொரு பகுதியில், குழாய் சேதமடைந்தால் வாரிய தலைமை அலுவலக உயர் அதிகாரியிடம் ஒப்புதல் பெற வேண்டி உள்ளது. சிறிய பழுதை சீரமைக்கக் கூட, மண்டல பொறியாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை.இதனால், குழாய் பழுதை சீரமைக்க காலதாமதம் ஏற்படுகிறது. பழுதடைந்த உபகரணங்களுக்கு மாற்று உபகரணம் வழங்குவதிலும், நிர்வாக சிக்கல் உள்ளது. இதன் காரணமாக, சீரமைத்த பள்ளங்களில் அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ