ரூ.7 கோடியில் நவீன மயானம்: வேளச்சேரியில் பணி துவக்கம்
அடையாறு: வேளச்சேரியில், 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், 6.85 கோடி ரூபாயில், நவீன மயானம் அமைக்கும் பணியை, அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். அடையாறு மண்டலம், 172வது வார்டு, வேளச்சேரி, குருநானக் கல்லுாரி அருகில், மாநகராட்சிக்கு சொந்தமான, 2 ஏக்கருக்கு மேல் பரப்பு கொண்ட மயானம் உள்ளது. அதை நவீனமயமாக மாற்ற, மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக, 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், மாநகராட்சி மற்றும் குருநானக் கல்வி குழுமம் இணைந்து, 6.85 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அமைச்சர் சுப்பிரமணியன், நேற்று பணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மண்டல தலைவர் துரைராஜ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர். மொத்தம், 10,000 சதுர அடி பரப்பில், இரண்டு தகன மேடை, துக்கம் அனுசரிக்கும் கூடம், சடங்கு அறை, கோவில், புகைபோக்கி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், ஜெனரேட்டர் வசதி, சுற்றுச்சூழல் நிலப்பரப்பு, கழிப்பறை, அலுவலக அறை உள்ளிட்ட வசதிகளுடன் இது அமைகிறது. மொத்த பணியை ஒரு ஆண்டிற்குள் முடிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.