சென்னை, மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க கோரி சி.ஐ.டி.யு., சார்பில், சென்னையில் நேற்று நடந்த பேரணியில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழகத்தில் ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணத்தை 2013ல் அரசு மாற்றி அமைத்தது. அதன்பின் மீட்டர் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை. இது தொடர்பான வழக்கில், மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அரசு தரப்பில், இரண்டு ஆண்டுகளாக பல கட்ட பேச்சு நடத்தப்பட்டது. இருப்பினும், 11 ஆண்டுகளாக மீட்டர் கட்டணம் உயர்த்தப்படாமல் உள்ளது. இந்த நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் முன்பு சி.ஐ.டி.யு., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்:உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி விரைந்து மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும், பைக் டாக்சிக்கு தடை விதிக்க வேண்டும். ஆன்லைன் அபராதத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். அரசின் ஆட்டோ செயலியை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.புதிய ஆட்டோக்களுக்கு 10,000 ரூபாய் மானியம் வழங்க வேண்டும்.இந்த கோரிக்ககைளை வலியுறுத்தி தமிழகம் முழுதும் போராட்டம் நடந்தது. இதன் ஒருபகுதியாக சென்னை எழும்பூரில் இருந்து தலைமை செயலகம் நோக்கி பேரணி நடந்தது.இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சி.ஐ.டி.யு., ஆட்டோ தொழிலாளர் சம்மேளன செயல் தலைவர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் பேசினர். தமிழகம் முழுதும் 50 இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 6,000க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் பங்கேற்றனர். செங்குன்றத்தில் பேருந்து நிலையம் முன், 50க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் கூடி கோரிக்கை கோஷங்களை முழங்கினர். கிண்டி, மீனம்பாக்கம், திருவான்மியூர், சோழிங்கநல்லுார் ஆகிய ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் முன் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், 400க்கும் மேற்பட்ட ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.