உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீட்டை விட்டு மகன்கள் விரட்டியதால் கலெக்டர் ஆபீசில் தாய் தீக்குளிக்க முயற்சி

வீட்டை விட்டு மகன்கள் விரட்டியதால் கலெக்டர் ஆபீசில் தாய் தீக்குளிக்க முயற்சி

வடக்கு கடற்கரை: வீட்டை விட்டு விரட்டிய மகன்கள் மீது நடவடிக்கை கோரி, கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தாயால் பரபரப்பு ஏற்பட்டது. ராயபுரம், கல்மண்டபம் மார்க்கெட் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரி, 75. இவருக்கு சொந்தமாக வீடு உள்ளது. அந்த வீட்டில் சுந்தரி தன் இரண்டு மகன்கள், மருமகள்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில், மகன்களும், மருமகள்களும் சேர்ந்து, சுந்தரியை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டனர். இதனால், சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள மகள் வீட்டில், சுந்தரி வசித்து வருகிறார். இவர் நேற்று, சென்னை கலெக்டர் அலுவலகம் சென்றார். திடீரென பெட்ரோலை தன் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த வடக்கு கடற்கரை போலீசார், அவரை தடுத்து நிறுத்தினர். அவரது உடலில் தண்ணீர் ஊற்றி, மாற்று புடவை கொடுத்து உதவினர். விசாரணையில், 'இரு மகன்களும், மருமகள்களும் தன்னை வீட்டை விட்டு விரட்டியது குறித்து, ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன், போலீசார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, கலெக்டர் அலுவலகம் வந்து தீக்குளிக்க முயன்றேன்' என்றார். பின், சுந்தரியை ராயபுரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று, போலீசார் விசாரித்து வருகின்றனர். மூதாட்டி கலெக்டர் அலுவலகத்தில் திடீரென தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ