அபராத வசூலில் தொழில்நுட்ப கோளாறு வாகன ஓட்டிகள், போலீசார் மல்லுக்கட்டு
சென்னை, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ், 55 போக்குவரத்து காவல் நிலையங்கள் உள்ளன.அவற்றில் பணிபுரியும் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், தங்களது பகுதியில் சாலை விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை வழிமறித்து, தினமும் அபராதம் விதித்து வருகின்றனர். இத்தொகை, வாகன ஓட்டிகளிடம் இருந்து 'டிஜிட்டல்' முறையில் வசூலிக்கப்படுகிறது.வாகன ஓட்டிகளின் வங்கி கணக்கிலிருந்து, விதிமீறலுக்காக பணம் எடுக்கப்பட்டதாக, குறுஞ்செய்தி வருகிறது. ஆனால், போலீசார் வைத்துள்ள 'பாயின்ட் ஆப் சேல்' எனும் கையடக்க கருவியில், இதுகுறித்து காட்டப்படுவதில்லை.இதனால் போக்குவரத்து போலீசார், விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் 'பென்டிங்' என ரசீது வழங்குவதால், இரு தரப்பினரிடையே வாய்தகராறு ஏற்பட்டு வருகிறது.இதுகுறித்து, போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது:தொழில்நுட்ப கோளாறு குறித்து, உயர் அதிகாரிகளிடம் பலமுறை தகவல் தெரிவித்துவிட்டோம். ஆனால் அவற்றை சரிசெய்ய எந்த முயற்சியும் அதிகாரிகள் எடுக்கவில்லை. இதனால், வாகன ஓட்டிகளிடம் தினமும் மல்லுக்கட்ட வேண்டி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.