சோழிங்கநல்லுார் - சிறுசேரி மெட்ரோ ரயில் பணிகள் மந்தம் நெரிசலால் வாகன ஓட்டிகள் தவிப்பு
சென்னை, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், சோழிங்கநல்லுார் - சிறுசேரி இடையே மெட்ரோ ரயில் பணிகள் மந்தமாக நடந்து வருவதால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.சென்னையில் இரண்டாம் கட்டமாக, மாதவரம் - சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ், மாதவரம் - சோழிங்கநல்லுார் என, மூன்று வழித்தடங்களில், 116 கி.மீ., துாரத்திற்கு, மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. பல்வேறு இடங்களில் மேம்பால பாதைகளிலும், சுரங்கப்பாதை பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. ஆனால், மாதவரம் - சிறுசேரி தடத்தில் ஒரு பகுதியாக சோழிங்கநல்லுார் - சிறுசேரி இடையே மெட்ரோ ரயில் மேம்பால பணி தாமதமாவதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.இதுகுறித்து, வாகன ஓட்டிகள் சிலர் கூறியதாவது: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், சோழிங்கநல்லுார் - சிறுசேரி சிப்காட் வரை, மெட்ரோ ரயில் மேம்பால பாதைக்கான பிரமாண்ட துாண்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கடந்த சில மாதங்களாக அடுத்தகட்ட பணிகள் எதுவும் நடக்கவில்லை. அங்குள்ள தடுப்புகளும் அகற்றப்படவில்லை.இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே, இந்த பாதையில் மெட்ரோ ரயில் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான மெட்ரோ ரயில் தடத்தின் பெரும்பாலான இடங்களில், பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்த வழித்தடத்தின் கடைசி பகுதியான, சோழிங்கநல்லுார் முதல் சிறுசேரி சிப்காட் வரை, 10 கி.மீ., மேம்பால பாதை அமைப்பதற்கான துாண்களை அமைத்துள்ளோம். அடுத்தகட்டமாக, மேம்பாலம் அமைத்து, பாதை அமைக்கும் பணிகள் துவங்க உள்ளோம். பணிகள் சற்று தாமதம் ஏற்பட்டாலும், திட்டமிட்டப்படி மேற்கொள்ளப்படும்.இரண்டாம் கட்டத்திட்டத்தின் அனைத்து மெட்ரோ ரயில் பணிகளையும், 2027ல் முடிக்க உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.