போக்குவரத்து துண்டித்த சாலைகள் பள்ளத்தில் சிக்கிய வாகன ஓட்டிகள்
சென்னை, டிச. 13-கிண்டி, ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் சமீபத்தில் அமைத்த புதிய குளங்கள் நிரம்பி, வெள்ளம் வெளியேறியது. இதனால், வேளச்சேரியில் இருந்து கிண்டி ரயில் நிலையம் நோக்கி செல்லும், ஐந்து பர்லாங் சாலையில் வெள்ளம் அதிகரித்ததால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.வேளச்சேரி விரைவு சாலையில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் பழைய வடிகாலை இடித்து, புதிய வடிகால் கட்டும் பணி நடக்கிறது.இதற்காக, பழைய வடிகாலை அடைத்து வைத்ததால், வேளச்சேரி ஏரியின் ஒரு பகுதியில் இருந்து வெளியேறிய வெள்ளம், விரைவு சாலை மற்றும் ராஜலட்சுமி நகரில் உள்ள மூன்று தெருக்களில் தேங்கியது. இதனால், விரைவு சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.ஓ.எம்.ஆரில் கந்தன்சாவடி, துரைப்பாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லுார், செம்மஞ்சேரி சாலையில் வெள்ளம் தேங்கியதால், வாகனங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்தன.துரைப்பாக்கத்தில், சாலையில் இருந்த பள்ளம் தெரியாத அளவிற்கு தண்ணீர் தேங்கியதால், அதில் இருசக்கர வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைந்தனர். சோழிங்கநல்லுார் அணுகு சாலைகளில் உள்வாங்கிய பள்ளங்களில், கார்களின் முன் டயர் சிக்கியது. மழைநீரால் பள்ளங்கள் இருப்பது தெரியாததால், ஓ.எம்.ஆரில் விபத்துகள் அதிகரிக்கின்றன. பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.கிண்டி சர்தார் பட்டேல் சாலை, தரமணி, அடையாறு, இந்திரா நகர், திருவான்மியூர் பேருந்து நிலையம், நீலாங்கரை போன்ற பகுதிகளில் பிரதான சாலை மற்றும் பல தெருக்களில் வெள்ளம் தேங்கியதால், பகுதிமக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்தனர்.