கொள்ளை பணத்தில் பங்கு தராததால் கொலை: 5 பேருக்கு ஆயுள் தண்டனை
சென்னை,ராயப்பேட்டை, பி.வி.கோவில் தெருவைச் சேர்ந்தவர் கலைவாணன், 35. இவரும், அதே பகுதியைச் சேர்ந்த தரணி, 24, என்பவரும், கடந்த 2015 மே 4ம் தேதி, ஆந்திராவில் ஒரு காரில் இருந்த பணத்தை கொள்ளையடித்தனர்.அந்த பணத்துடன் சென்னை நோக்கி வந்தபோது, கொள்ளை பணத்தில் பங்கு பிரித்து தருமாறு, கலைவாணன் கேட்டுள்ளார். ஆனால், தரணி மறுத்துவிட்டார். இதனால், முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.தரணியை பழிவாங்க கலைவாணன், தன் நண்பர்களுடன் திட்டம் போட்டு காத்திருந்தார். இந்நிலையில், 2015 ஜூன் 20ம் தேதி, சேப்பாக்கம் பெல்ஸ் சாலையில் தரணி நிற்பதை அறிந்து, நண்பர்களுடன் கலைவாணன் அங்கு சென்றுள்ளார். தப்பியோட முயன்ற தரணியை, கலைவாணன் கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் அவர் உயிரிழந்தார்.இது குறித்து விசாரித்த திருவல்லிக்கேணி போலீசார், கலைவாணன், கேசவன், 24, ராஜேந்திர பிரசாத், 24, விஜி, 25, ஸ்ரீகாந்த், 25, முகமது ரஹீம், 24, அஷிப் ஜேக்கப், 20, பாபு என்ற லியாகத், 19, பாபு, 24, மற்றும் சந்துரு, 25, ஆகிய 10 பேரை, கைது செய்தனர்.இந்த வழக்கு, சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, 19 கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆர்.ராஜ்குமார் முன் நடந்தது. விசாரணை காலத்தில் கலைவாணன் இறந்துவிட்டதால், அவர் மீதான வழக்கு கைவிடப்பட்டது.மற்றவர்கள் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி, கேசவன், ராஜேந்திர பிரசாத், விஜி, ஸ்ரீகாந்த் மற்றும் ஆஷிப் ஜேக்கப் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி அரசு தரப்பு நிரூபித்துள்ளது.எனவே, அவர்களுக்கு ஆயுள் தண்டனையும், அபராதமாக 10,000 ரூபாயும் விதித்து தீர்ப்பளித்தார். மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், அவர்களை விடுதலை செய்து, நீதிபதி உத்தரவிட்டார்.