ஏர்போர்டில் மர்ம காய்ச்சல் பரவல்? ஊழியர்கள், அதிகாரிகளிடையே பீதி
சென்னை, சென்னை விமான நிலையத்தில் பணியாற்றுவோருக்கு மர்ம காய்ச்சல் பரவி வருவதால், ஊழியர்கள் மற்றும் போலீசாரிடையே பீதி ஏற்பட்டுள்ளது.சென்னை, மீனம்பாக்கத்தில் சென்னை சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு, ஒரு நாளைக்கு 50,000க்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்கின்றனர். சர்வதேச விமான சேவைகளும் உள்ளதால், பல நாடுகளில் இருந்து பயணியர் வருகின்றனர்.ஏ.ஏ.ஐ., எனப்படும் விமான நிலைய ஆணைய அதிகாரிகள், சுங்கத்துறை, மாநில போலீஸ், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் என, பல அரசு அமைப்புகளைச் சேர்ந்தோரும், தனியார் விமான நிறுவன ஊழியர்களும் பணிபுரிகின்றனர்.கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்று துவங்கிய போது, நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பயணியர் மட்டுமின்றி ஊழியர்கள் உட்பட அனைவரும் முககவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தன. நோய் பரவல் படிப்படியாக குறைய துவங்கியதால், வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள், பணியில் இருக்கும் போலீசார் சிலருக்கு திடீரென காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது.முனையங்களில் பணியாற்றும் விமான நிறுவன ஊழியர்கள், சரக்குகளை கையாளும் 'கார்கோ' பகுதியில் பணியாற்றுவோருக்கும் சளி, இருமல், உடலில் அதிக வெப்பநிலை உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளதாக கூறப்படுகிறது. சமீப நாட்களாக கொரோனா தொற்று பரவல் மற்றும் கேரளாவில் பரவி வரும் நிபா காய்ச்ல் இருக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், 'காய்ச்சல் பரவல் பற்றி எந்த புகாரும் வரவில்லை. புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.புகார் வரவில்லைசென்னை விமான நிலைய வளாகங்களில், ஊழியர்கள் மற்றும் போலீசாருக்கு கொரோனா தொற்று பரவல், இதர காய்ச்சல் பரவல் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த புகார்களும் வரவில்லை. சர்வதேச முனையங்களில் வந்து செல்வோர் வாயிலாக சிலருக்கு நோய் பரவல் இருக்க வாய்ப்புகள் அதிகம். அறிகுறிகள் இருப்போர், தாமாக வந்து மருத்துவமனையில் சோதனை செய்து கொள்ளலாம்.- பொது சுகாதாரத்துறை அதிகாரிகள்
வெப்பநிலை பரிசோதனை இல்லை
கொரோன தொற்று பரவலுக்கு பிறகும், ஒரு ஊழியர், விமான நிலையத்திற்குள் நுழைவதற்கு முன், அவரது வெப்பநிலை சீராக உள்ளதா என்பதை சோதித்தே அனுமதிக்கப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் இந்நடைமுறை, தற்போது செயல்பாட்டில் கிடையாது. ஊழியர்கள் யாருக்காவது அறிகுறிகள் இருந்தாலும் கண்டுபிடிக்க முடியாத சூழல் உள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கேரளா மாநிலத்தில் இருந்து நுாற்றுக்கணக்கான பயணியர் சென்னை வருகின்றனர். எனவே, முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணிகளை முடுக்கிவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.