பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்ம பிரம்மோத்சவம் துவக்கம்
சென்னை, பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், ஆனி மாத நரசிம்ம பிரம்மோத்சவம் நேற்று காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் பார்த்தசாரதி சுவாமிக்கு சித்திரை மாதமும், நரசிம்மருக்கு ஆனி மாதமும் பிரம்மோத்சவம் நடைபெறுகிறது. இந்த ஆண்டிற்கான நரசிம்ம பிரம்மோத்சவம் நேற்று அதிகாலை, கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவின் இரண்டாம் நாளான இன்று காலை சேஷ வாகனத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் உற்சவர் தெள்ளியசிங்கர் அருள்பாலிக்கிறார். மூன்றாம் நாள் விழாவான கருடசேவை உற்சவம் நாளை நடக்கிறது. காலை 5:30 மணிக்கு கோபுர வாசல் தரிசனமும், இரவு அம்ச வாகன புறப்பாடும் நடக்கிறது.விழாவின் பிரதான நாளான வரும், 10ம் தேதி தேர்திருவிழா நடக்கிறது. அன்று காலை 7:00 மணிக்கு பக்தர்களால் தேர் வடம் பிடிக்கப்படுகிறது. இரவு 9:00 மணிக்கு நரசிம்மர் தோட்டத் திருமஞ்சனம் நடக்கிறது.***