மேலும் செய்திகள்
இயற்கை காய்கறி சந்தை உருவாக்க எதிர்பார்ப்பு
27-Apr-2025
இயற்கை முறையில் விளைவிக்கப்படும் பொருட்களின் மாதாந்திர உழவர் சந்தை, கீழ்ப்பாக்கத்தில் இன்று நடக்கிறது.தமிழ்நாடு இயற்கை வேளாண் கூட்டமைப்பு, சென்னை ஆர்கானிக் மார்க்கெட் இணைந்து, ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை, இயற்கை உழவர் சந்தையை சென்னையில் நடத்துகிறது.அதன்படி, இந்த மாதம் கீழ்ப்பாக்கம், ஆர்மஸ் சாலையில் உள்ள எம்.சி.டி.முத்தையா நினைவு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், இன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது.இது குறித்து, இயற்கை வேளாண் கூட்டமைப்பின் அனந்து கூறியதாவது:இந்த சந்தையின் முக்கிய நோக்கம், வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான உணவு மற்றும் விவசாயிகளுக்கு நியாயமான விலை வழங்குவது. உழவர் சந்தையில் இயற்கை விவசாயிகள், மகளிர் குழுக்கள், சமூக நிறுவனங்கள் ஆகியோர் வாயிலாக, 20க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.சந்தையில் இயற்கை காய்கறி, 30க்கும் மேற்பட்ட கீரை வகைகள், பழங்கள், 'ஆர்கானிக்' மளிகை பொருட்கள், 10த்திற்கும் மேற்பட்ட பாரம்பரிய அரிசி, சிறுதானியங்கள், செக்கிலாட்டிய எண்ணெய், பருப்பு வகைகள்,வெல்லம், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், இயற்கை சாயம்கொண்டு கைத்தறி இயற்கை பருத்தி ஆடைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.வாடிக்கையாளர்களுக்கு சுவையான ஆரோக்கியமான சமைத்த உணவு மற்றும் தின்பண்டங்கள், மூலிகை தேநீர் மற்றும் பானங்களும் கிடைக்கும். மேலும், இயற்கை வேளாண்மை, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து முக்கிய நிபுணர்களின் அமர்வுகள், பயிற்சிப் பட்டறைகள் மற்றும் குழந்தைகளுக்கான அரங்குகளும் இருக்கும்.இந்த சந்தையானது பிளாஸ்டிக் இல்லா,'ஜீரோ-வேஸ்ட்' நிகழ்வாக இருக்கும். வாடிக்கையாளர்கள் பைகள் கொண்டு வரவேண்டும். வரும் காலங்களில் சென்னையின் பல்வேறு இடங்களில் வாராந்திர சந்தைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.மேலும் விபரங்களுக்கு, 99620 43710, 89391 38207 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.-- -நமது நிருபர்- -
27-Apr-2025