மின் கம்பத்தை அகற்றுவதில் அலட்சியம் பாதியில் நிற்கும் போக்கு கால்வாய் திட்டம்
மூவரசம்பட்டு ஏரியில் இருந்து மடிப்பாக்கம் ஏரிக்கும், கீழ்க்கட்டளை- நாராயணபுரம் ஏரி போக்கு கால்வாய்க்கும் இணைப்பு கொடுக்கும், 31 கோடி ரூபாய் மதிப்பிலான போக்கு கால்வாய் திட்டத்தின் முதல்கட்டப் பணி, 98 சதவீதம் நிறைவு பெற்றுள்ள நிலையில், மின்வாரியத்தின் அலட்சியத்தால் இணைப்பு கொடுக்க முடியாமல் பாதியில் நிற்கிறது. மூவரசம்பட்டு ஏரியில் இருந்து மடிப்பாக்கம், பெரிய ஏரி, புழுதிவாக்கம் சித்தேரி, கைவேலி பகுதிக்கு போக்கு கால்வாய் இருந்துள்ளது. சென்னை நகர் வளர்ச்சி காரணமாக மடிப்பாக்கம், கீழ்க்க ட்டளை, மூவரசம்பட்டு பகுதியில், குடியிருப்புகள் வளர ஆரம்பித்தன. அதன் காரணமாக, ஏரியின் போக்கு கால்வாய்கள் மூடப்பட்டு, அவை இருந்த வழித்த டமே தெரியாத அளவிற்கு குடியிருப்புகள், சாலையாக மாற்றப்பட்டு விட்டன. மூவரசம்பட்டு ஏரியும் டன் கணக்கில் குப்பை கொட்டப்பட்டு, மழைநீர் தேங்குவது குறைந்ததால், பெரிய அளவில் பாதிப்பு தெரியவில்லை. நம் நாளிதழ் செய்திகளின் காரணமாக, சில ஆண்டுகளுக்கு முன் ஏரியில் இருந்த குப்பை முழுதும் அகற்றி, துார் வாரி சீரமைக்கப்பட்டது. அதன் விளைவாக, பருவமழை காலத்தில் மூவரசம்பட்டு ஏரி நிரம்பி, உபரி நீர் கலங்கலில் இருந்து குடியிருப்பு பகுதிகளில் வழிந்தோடி, பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், பாதிப்பு கடுமையாக இருந்தது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், நீர்வளத்துறை சார்பில், மூவரசம்பட்டு ஏரியில் இருந்து மடிப்பாக்கம் ஏரிக்கும், கீழ்க்கட்டளை- நாராயணபுரம் போக்கு கால்வாய்க்கும், பூமிக்குள் போக்கு கால்வாய் அமைக்கப்பட்டது. அந்த கால்வாயை, பரங்கிமலை- - மேடவாக்கம் பிரதான சாலையில் உள்ள கால்வாயில் இணைப்பதற்கு இடையூறாக மின் கம்பம் ஒன்று உள்ளது. அதை அகற்ற நீர்வளத்துறை சார்பில் மின்வாரியத்திற்கு கோரிக்கை வைத்து, இதுவரை மின் கம்பம் அகற்றப்படவில்லை. இதனால், இணைப்பு கொடுக்கும் பணி கிடப்பில் உள்ளது. நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மூவரசம்பட்டு ஏரி கலங்கலில் ரெகுலேட்டர் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து சாலைக்கு அடியில் ருக்மணி நகர், மேடவாக்கம் பிரதான சாலை வழியாக, மடிப்பாக்கம் ஏரிக்கு போக்கு கால்வாய் கொண்டு செல்லப்படுகிறது. மடிப்பாக்கம் ஏரி நிரம்பி வழியாமல் இருக்க, மேடவாக்கம் பிரதான சாலையில், போக்கு கால்வாயில் இணைப்பு கொடுத்து, அதை கீழ்க்கட்டளை- நாராயணபுரம் போக்கு கால்வாயுடன் இணைக்கப்படுகிறது. இது இரு கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்காக, 31 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில், மூவரசம்பட்டு - -மடிப்பாக்கம் ஏரிக்கு இடையே, 840 மீட்டர் துாரம், 2 மீட்டர் அகலம், 1.8 மீட்டர் உயரத்தில் போக்கு கால்வாய் அமைக்கும் பணியில், 836 மீட்டர் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள நான்கு மீட்டர் இணைப்பு பணி, ஒரு சில நாட்களில் முடிக்கப்படும். இந்த போக்கு கால்வாயை, பரங்கிமலை- - மேடவாக்கம் கால்வாயுடன் இணைப்பு கொடுக்க, மின் கம்பம் ஒன்று இடையூறாக உள்ளது. அதை அகற்றக்கோரி மின்வாரியத்திற்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அது அகற்றப்பட்டவுடன், இணைப்பு கொடுத்து முதல் கட்ட திட்டம் முடிக்கப்படும். மேலும், மேடவாக்கம் பிரதான சாலையில் இருந்து, கீழ்க்கட்டளை- நாராயணபுரம் போக்கு கால்வாய் வரை, 860 மீட்டர் துாரத்திற்கு போக்கு கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். - -நமது நிருபர்- -