உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நடைபாதை பராமரிப்பில் அலட்சியம் தடுப்பு கற்களை உடைத்து அட்டூழியம்

நடைபாதை பராமரிப்பில் அலட்சியம் தடுப்பு கற்களை உடைத்து அட்டூழியம்

அண்ணா நகர்:அண்ணா நகர் மண்டலத்தில், நடைபாதைகள் பராமரிப்பில் மாநகராட்சி அலட்சியம் காட்டுவதால், தடுப்பு கற்களை உடைத்து, ஆக்கிரமிப்பாளர்கள் அட்டூழியத்தில் ஈடுபடுகின்றனர்.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பாதசாரிகள் பயன்பாட்டிற்காக, அகலமான நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அவற்றை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க, தடுப்பு கற்கள் அமைக்கப்பட்டன. மேலும், 'நடைபாதை நடப்பதற்கே' என்றும், யாரேனும் ஆக்கிரமித்தால் புகார் தெரிவிக்க, இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் கொண்ட பலகைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு உள்ளன. இருப்பினும் நடைபாதைகள் ஆக்கிரமிப்புக்கு விடிவு கிடைப்பதில்லை. குறிப்பாக, அண்ணா நகர் மண்டலத்திற்குட்பட்ட, அண்ணா நகர் வலைவு முதல் ரவுண்டா வரை, சாந்தி காலனி இருபுறங்கள், இரண்டு, மூன்றாவது அவென்யூ உள்ளிட்ட இடங்களில், நடைபாதைகள் ஆக்கிரமித்து கடைகளும், வாகனங்களும் நிறுத்தப்படுகின்றன. சில இடங்களில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு வசதிக்கேற்ப தடுப்பு கற்கள் உடைத்து வீசப்பட்டுள்ளன. இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:அண்ணா நகர் மண்டலத்தில், நடைபாதை ஆக்கிரமிப்புகள், கண்துடைப்புக்காக வாரம் ஒரு முறை அகற்றப்படுகின்றன. அதன்பின், எந்தநடவடிக்கையும் எடுப்பதில்லை. குறிப்பாக, அண்ணா ஆர்ச் முதல் சாந்தி காலனி வரையிலான என்.எஸ்.கே., சாலையில், நடைபாதை முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு, தடுப்பு கற்களும் சேதமடைந்துள்ளன. டீ கடை ஒன்றில், தடுப்பு கற்களை உடைத்து, மழைநீர் வடிகாலில் கழிவுநீர் விடுகின்றனர். அண்ணா நகர் முழுதும் நடைபாதைகள் ஆக்கிரமிப்பில் இருப்பதால், பாதசாரிகள் சாலையில் நடந்து செல்லும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அண்ணா நகரில் போக்குவரத்து விதிகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சம் வாகன ஓட்டிகளிடையே உள்ளது. அதேபோல், நடைபாதை ஆக்கிரமிப்பு, தடுப்பு கற்கள் உடைக்கும் நபர்கள் மீதும், மாநகராட்சி மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை