செய்திகள் சில வரிகளில் தாக்குதலுக்குள்ளான சிறுவன் பலி:6 பேர் கைது
கொளத்துார்: கொளத்துார் முருகன் நகரைச் சேர்ந்தவர் வீரமணி, 47; நடத்துநர். இவரது இளைய மகன் ஹர்ஷவர்தன், 17; மெக்கானிக். முன்விரோதம் காரணமாக ஹர்ஷவர்தன் மற்றும் அவரது நண்பர் கவுதமை, அதே பகுதியைச் சேர்ந்த தனுஷ் நண்பர்களுடன் சேர்ந்து, கடந்த 18ம் தேதி தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த ஹர்ஷவர்தன், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். இந்த வழக்கில், மூவர் கைது செய்யப்பட்ட நிலையில், தாதங்குப்பத்தை சேர்ந்த ரிஷிகாந்த், 18, உட்பட மேலும் மூவர் நேற்று கைது செய்யப்பட்டனர். வீடு புகுந்து 8 சவரன் திருட்டு அரும்பாக்கம்: அரும்பாக்கம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக், 32; பைக் மெக்கானிக். கடந்த 20ம் தேதி இரவு, கார்த்திக்கின் மனைவி டி.பி.சத்திரத்தில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை வீட்டிற்கு வந்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த எட்டு சவரன் நகை, 30,000 ரூபாய், 200 கிராம் வெள்ளி பொருட்கள் திருடுபோயிருந்தன. அரும்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர். தலைமறைவாக இருந்த முதியவர் கைது சென்னை: மயிலாப்பூர் போலீசார், அடிதடி வழக்கில் நீலாங்கரை, ரங்காரெட்டி கார்டன் பகுதியைச் சேர்ந்த ஜெய்சங்கர், 60, என்பவரை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை, சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், ஜாமினில் வெளியே வந்த அவர் தலைமறைவானார். தொடர்ந்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாததால், ஆக., 30ம் தேதி, நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இதையடுத்து, போலீசார் நேற்று ஜெய்சங்கரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.