உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

சிறுவனிடம் அத்துமீறல் சர்ச் ஊழியர் கைது புளியந்தோப்பு: புளியந்தோப்பு காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும், 30 வயது பெண், புளியந்தோப்பு மகளிர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், 'என் 9 வயது மகன், அருகே உள்ள சர்ச்சுக்கு அடிக்கடி சென்று வருவான். 'அப்போது, சர்ச்சில் உதவியாளராக பணிபுரியும் ஜான் ரமேஷ், 43, என்பவர், என் மகனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். போலீசாரின் விசாரணையில் ஜான் ரமேஷ் சிறுவனிடம் அத்துமீறியது உறுதியானது. இதையடுத்து, போக்சோ சட்டத்தில் அவர், கைது செய்யப்பட்டார். வழிப்பறி செய்த சகோதரர்கள் சிக்கினர் ராஜமங்கலம்: கொளத்துார், நேரு தெருவைச் சேர்ந்தவர் சேகர், 54; சலுான் கடைக்காரர். இவர், 19ம் தேதி அதிகாலை டீ குடிப்பதற்காக, கொளத்துார், ஜீவா தெரு அருகே நடந்து சென்றார். அப்போது, பைக்கில் வந்த மூவர், சேகரின் 2 கிராம் மோதிரம், மொபைல் போன் உள்ளிட்டவற்றை பறித்து தப்பினர். ராஜமங்கலம் போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட வியாசர்பாடியைச் சேர்ந்த சாமுவேல், 24, அவரது தம்பி சின்ன ஷாம், 22 ஆகியோரை, நேற்று முன்தினம் கைது செய்தனர். வழக்கில் தொடர்புடைய, சூளைமேடைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், மற்றொரு வழக்கில் விழுப்புரம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரெட்டேரியில் மிதந்த வாலிபர் உடல் புழல்: கொளத்துார், ரெட்டேரியில் ஆண் சடலம் மிதப்பதாக வந்த தகவலையடுத்து, கொளத்துார் தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்று உடலை மீட்டு, புழல் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், கொளத்துாரைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான கார்த்திக், 21 என்பதும் தெரிய வந்தது. தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர். வீட்டில் நுழைந்து போன் திருடியவர் கைது கொருக்குப்பேட்டை: கொருக்குப்பேட்டை, டிரைவர் காலனியைச் சேர்ந்தவர் வினோத்குமார், 44. இவரது வீட்டிற்குள் நேற்று நுழைந்த நபர், மொபைல் போனை திருடி தப்பி ஓடினார். அருகில் இருந்தவர்கள், அவரை மடக்கி பிடித்து கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில், கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய கமலநாதன், 28 என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். வாலிபர் பலி: '108' ஊழியர்கள் மீது புகார் கண்ணகிநகர்: கண்ணகி நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ், 35. வீட்டில் இருந்த இவருக்கு, நேற்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உறவினர்கள் '108' ஆம்புலன்ஸ் வரவழைத்தனர். வாகனத்தில் ஆக்சிஜன் கருவி இல்லாததால், முதலுதவி அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மாற்று ஆம்புலன்ஸ் வராததால், நேராக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில் ராஜேஷ் இறந்தது தெரிய வந்தது. 'ராஜேஷின் இறப்புக்கு, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தான் காரணம்' என, உறவினர்கள் புகார் அளித்தனர். கண்ணகி நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை