செய்திகள் சில வரிகளில்
ஆடுகள் திருடிய மூவர் கைது சென்னை: சூளைமேடு காந்தி சாலையைச் சேர்ந்தவர் லத்தீப், 52. இவர், சூளைமேடு பெரியார் பாதையில் ஆடு மற்றும் கோழி இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான ஆடுகள், இரு நாட்களுக்கு முன் திருடு போயின. சூளைமேடு போலீசார் விசாரணயில், அமைந்தகரையைச் சேர்ந்த ஹரிதாஸ், 19, பிரஜின்குமார், 20, அரும்பாக்கத்தைச் சேர்ந்த சரவணன், 20, ஆகியோர் ஆடுகளை திருடியது தெரியவந்தது. நேற்று மூவரும் கைது செய்யப்பட்டனர். வீடு புகுந்து நகை திருட்டு ஆவடி: முத்தாபுதுப்பேட்டை, கரிமேடு, அண்ணா நகரைச் சேர்ந்த ராஜம்மாள், 70, என்பவரின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, நேற்று முன்தினம் பீரோவில் வைத்திருந்த 4 சவரன் தங்க சங்கிலி மற்றும் 10 ஆயிரம் ரூபாய் திருடுபோனது. அதேபோல், எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த சரண்ராஜ், 27, என்பவரின் வீட்டிலும் புகுந்த மர்மநபர்கள், ஒரு லட்சம் ரூபாயை திருடி சென்றனர். ஆவடி முத்தாபுதுப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர். பேட்டரி திருடர்கள் இருவர் கைது மாதவரம்: நுங்கம் பாக்கத்தை சேர்ந்தவர் சங்கர், 42. இவர், புழல், கொளத்துார் பகுதியில் உள்ள மொபைல் போன் டவர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். கடந்த மாதம் 22ம் தேதி, மாதவரம் பகுதி டவரை கண்காணித்த போது, அங்கு வைத்திருந்த ஒன்பது பேட்டரிகள் திருடு போயிருந்தன. மாதவரம் போலீசார் விசாரணையில், மாதவரம் தினேஷ்குமார், 30, மற்றும் அருண்குமார், 28, ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. இருவரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். 42 பேருக்கு பட்டா வழங்கிய அமைச்சர் ஆலந்துார்: ஆலந்துார் வ.உ.சி., தெருவில் குடியிருப்போரில், முதற்கட்டமாக, 42 பேருக்கு வீட்டுமனை பட்டாவை, அமைச்சர் அன்பரசன் நேற்று வழங்கினார். அந்நிகழ்ச்சியில், ஆலந்துார் தாசில்தார் பரிமளகாந்தன், வார்டு கவுன்சிலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வழிப்பறி ரவுடி கைது ஓட்டேரி: புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி 'ஸ்பீடு' அஜீத், 24. இவர் மீது, 20க்கும் மேற்பட்ட வழிப்பறி, போக்சோ, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில், ஸ்டீபன்சன் சாலையில் நேற்று மாலை, பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், அஜீத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.