செய்திகள் சில வரிகளில்
போதை பொருள் விற்ற கும்பல் கைது எஸ்பிளனேடு: டெலிகிராம் ஆப்பில், பெங்களூரில் ஆர்டர் செய்து, மெத் ஆம்பெட்டமைன் வாங்கி, சென்னையில் விற்பனை செய்து வந்த, மண்ணடி பகுதியைச் சேர்ந்தவர் முகமது சலீத், 29, ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த அஸ்ரப் அலி, 26, ராயபுரம் லைலா பதானியா, 40, ஷாமினா ரஸ்கின், 23, உட்பட எட்டு பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். பைக் திருடிய இருவர் சிக்கினர் ஆவடி: ஆந்திராவைச் சேர்ந்தவர் தருண், 18. இவர், ஆவடி வெள்ளானுார் பகுதியில் உள்ள தனியார் கல்லுாரி மாணவர். விடுதிக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த இவரது 'யமஹா ஆர்.எக்ஸ்., 100' பைக், கடந்த மாதம் 27ம் தேதி திருட்டு போனது. விசாரித்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், திருட்டில் ஈடுபட்ட மோரை பகுதியைச் சேர்ந்த பிரேம், 21, பங்காருபேட்டை பகுதியைச் சேர்ந்த சிபிராஜ், 20, ஆகியோரை கைது செய்து, பைக்கை மீட்டனர். குட்கா விற்றவர் சிக்கினார் ஓட்டேரி, கந்தசாமி கோவில் தெருவில் உள்ள ராஜேஷ், 52 என்பவரின் பெட்டிக்கடையில், ஓட்டேரி போலீசாரின் சோதனையில் 2.5 கிலோ குட்கா சிக்கியது. அவரை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். வழிப்பறி செய்த ரவுடிக்கு 'காப்பு' பேசின்பாலம்: பேசின் பாலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கே.பி.பார்க் பகுதியில், பொதுமக்களை கத்திமுனையில் மிரட்டி பணம் பறித்த குமார், 19 என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர். துாய்மை பணியாளர்கள் மீது வழக்குப்பதிவு சென்னை: மெரினா கண்ணகி சிலை பின்புறம் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட துாய்மை பணியாளர்கள், 90 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். இவர்கள்மீது, இரண்டு பிரிவுகளின் கீழ், அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். குழந்தைகள் மையத்தில் காலி பணியிடம் சென்னை: குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின்கீழ் இயங்கும் மாவட்ட குழந்தைகள் உதவி மையம் மற்றும் ரயில்வே 'கியோஸ்க்' எனும் ரயில் நிலையங்களில், பல்வேறு சேவைகளை வழங்கும் மையத்திலும் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 21 வயது முதல் 52 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை https://chennai.nic.inஎன்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து, வரும் 15ம் தேதி மாலை 5:45 மணிக்குள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் தியாக சுவர் திறப்பு சென்னை: உடல் உறுப்பு தானம் செய்தவர்களை கவுரவிக்கும் வகையில், அவர்களது விபரங்கள் அடங்கிய தியாக சுவர், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தியாக சுவரை, அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் நேற்று திறந்து வைத்தனர்.