மெத்ஆம்பெட்டமைன் கடத்தல் பெங்களூருவில் நைஜீரியர் கைது
சென்னை:பெங்களூருவில் பதுங்கி, சென்னைக்கு மெத் ஆம் பெட்டமைன் போதை பொருள் கடத்திய நைஜீரிய வாலிபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.கடந்த மாதம், சென்னை அரும்பாக்கம் பகுதியில், மெத் ஆம் பெட்டமைன் போதை பொருள் விற்ற வழக்கில், கொடுங்கையூரைச் சேர்ந்தவர் தீபக், 31, அவரது மனைவி டாலி மேத்தா, 27 ஆகியோர், கைது செய்யப்பட்டனர். விசாரணையில், பெங்களூருவில் பதுங்கியுள்ள, நைஜீரிய வாலிபர் தலைமையில், போதை பொருள் கடத்தல் கும்பல் செயல்படுவது தெரியவந்தது. பெங்களூருவை சேர்ந்த விஸ்வநாதன், வண்ணராப்பேட்டை மஸ்தான் உட்பட, 11 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இவர்களை ஆறு நாள் காவலில் எடுத்தும் விசாரித்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி, பெங்களூருவில் பதுங்கி இருந்த, நைஜீரிய நாட்டைச் சேர்ந்த பிலிப்,31 என்பவரை, தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.அவர், சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், வட மாநிலங்களுக்கும் மெத் ஆம்பெட்டமைன் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. அவரின் கூட்டாளிகளையும் போலீசார் தேடி வருகின்றனர்.