வடசென்னை வளர்ச்சி பணிகள் சி.எம்.டி.ஏ., கூட்டத்தில் விவாதம்
சென்னை, வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளின் நிலவரம் குறித்து, நேற்று நடந்த சி.எம்.டி,ஏ., குழும கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ.,வின், 282வது குழும கூட்டம், அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நேற்று நடந்தது. சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலராக இருந்த அன்சுல் மிஸ்ரா மாற்றப்பட்டு, புதிய உறுப்பினர் செயலராக எஸ்.பிரபாகர் சமீபத்தில் பொறுப்பேற்றார். இதன்பின், முதல் குழும கூட்டம் நேற்று நடந்தது. அதில், வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் காகர்லா உஷா, சென்னை மேயர் பிரியா, வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், சி.எம்.டி.ஏ., நிதி, வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பிட்ட சில திட்டங்களுக்கு தேவையான நிலம் பெறுவது, கட்டட அனுமதி பெறுவது தொடர்பான பிரச்னைகள் விவாதிக்கப்பட்டன. மேலும், நில வகைபாடு மாற்றம், பணியாளர் நிர்வாகம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ***