உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மனநலம் பாதித்த பெண்ணை காப்பாற்ற முயன்ற இன்ஸ்.,க்கு எலும்பு முறிவு

மனநலம் பாதித்த பெண்ணை காப்பாற்ற முயன்ற இன்ஸ்.,க்கு எலும்பு முறிவு

தண்டையார்பேட்டை:சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, சோலையப்பன் தெருவை சேர்ந்தவர் கீதா, 31. இவரது கணவர் சிவானந்தம், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சாலை விபத்தில் உயிரிழந்தார். இவர்களுக்கு, 9 வயதில் மகனும், 4 வயதில் மகளும் உள்ளனர்.கணவர் சிவானந்தம் இறந்த அதிர்ச்சியில், கீதா மனநலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, கீதா தன் குழந்தைகளுடன் அவரது அப்பா வீட்டில் வசித்து வந்தார்.இந்நிலையில், நேற்று பழைய வண்ணாரப்பேட்டை வழியாக, கீதா ஆட்டோவில் சென்றார். அப்போது, ஆட்டோ வாகன நெரிசலில் நின்ற போது, திடீரென ஆட்டோவில் இருந்து இறங்கி ஓடினார்.திடீரென தண்டையார்பேட்டை, எம்.எம்.தியேட்டர் நான்காவது மாடியில், ஏணியில் ஏறி தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறியுள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த தியேட்டர் ஊழியர்கள், தண்டையார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சஜிதா தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, கீதாவிடம் சமரசம் பேசி, கீழே இறக்க முயன்றனர்.அப்போது, சஜிதாவை கீதா கீழே தள்ளி விட்டதால், அவரது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.பின், கீதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.காயமடைந்த இன்ஸ்பெக்டர் சஜிதா, அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை