வடபழனி முருகன் கோவிலில் ஓதுவார் பயிற்சி பள்ளி துவக்கம்
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ஆசிரியர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கினார். வடபழனி முருகன் கோவிலில், பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் வகையில், 1.16 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தில் துலாபாரம், தங்கரதம், அன்னதானத்திற்கு நன்கொடை வழங்குதல், இதர காணிக்கைகளை செலுத்துதல் ஆகியவற்றுக்கு முன்பதிவு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. தவிர, கோவில் நிகழ்ச்சிகளை நடத்த தனி அரங்கம், பக்தர்களின் உடைமைகளை பாதுகாக்கும் அறை உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை, அமைச்சர் சேகர்பாபு நேற்று திறந்து வைத்தார். அதேபோல், அறநிலையத்துறை சார்பில் வடபழனி முருகன் கோவிலில் நேற்று, ஓதுவார் பயிற்சிப் பள்ளி துவங்கப்பட்டுள்ளது. பகுதி நேரமாக செயல்படும் இப்பள்ளியில், 25 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அப்பள்ளிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தேவார ஆசிரியர், இசை ஆசிரியர் மற்றும் தமிழாசிரியர் ஆகியோருக்கு, பணி நியமன ஆணைகளை, அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர், கலை மற்றும் பண்பாட்டுத்துறை இயக்குநர் வளர்மதி, வடபழனி முருகன் கோவில் தக்கார் ல.ஆதிமூலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.