நெம்மேலியில் விதிமீறி கட்டிய பாலம் அரசு உத்தரவிட்டும் இடிக்காத அதிகாரிகள்
சென்னை, சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக, செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில், கடல் நீர் சுத்திகரிப்புக்கான இரண்டு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இரண்டாம் கட்ட ஆலை பணியின்போது, கடலோர ஒழுங்குமுறை மண்டல பகுதியில், அனுமதி இன்றி, 2019ல் பாலம் கட்டப்பட்டது.இதுகுறித்து, தென்னிந்திய மீனவர் நலச்சங்கம், தமிழக கடலோர ஒழுங்குமுறை மேலாண்மை குழுமத்திடம் புகார் அளித்தது.இதுகுறித்து, தணிக்கையின்போது கள ஆய்வு நடத்தப்பட்டது. கடலில் உயர் அலை மட்டத்தில் இருந்து, 1,640 அடி வரையிலான பகுதியில், எவ்வித கட்டுமானங்களும் மேற்கொள்ளக்கூடாது என்று தடை உள்ளது. இந்த தடையை மீறி, 328 அடிக்குள், அனுமதியின்றி பாலம் கட்டப்பட்டது உறுதியானது. உரிய நடவடிக்கை எடுக்கும்படி, செங்கல்பட்டு கலெக்டருக்கு, 2023ல் தமிழக அரசு உத்தரவிட்டது. தற்போதுவரை, பாலம் அகற்றப்படவில்லை என, மத்திய தணிக்கைத்துறை தெரிவித்துள்ளது.இதுகுறித்து, கடலோர ஒழுங்குமுறை மண்டல குழும அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இந்த விவகாரத்தில், மாவட்ட நிர்வாகத்துக்கு தொடர்ந்து நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பி வருகிறோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்' என்றனர்.