உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிளாம்பாக்கம் பேருந்து முனைய வளாகத்தில் காலநிலை பூங்கா 5 ஏக்கரில் ஆம்னி பஸ் நிறுத்துமிடம்

கிளாம்பாக்கம் பேருந்து முனைய வளாகத்தில் காலநிலை பூங்கா 5 ஏக்கரில் ஆம்னி பஸ் நிறுத்துமிடம்

சென்னை, கிளாம்பாக்கம் நுாற்றா ண்டு காலநிலை பூங்கா உள்ளிட்ட மூன்று திட்டங்களை, தலைமை செயலகத்தில் இருந்தபடி, முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, நேற்று திறந்துவைத்தார்.செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் நுாற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து, 7 கி.மீ., தொலைவில் உள்ள முடிச்சூரில், 5 ஏக்கர் பரப்பளவில் 42.7 கோடி ரூபாய் செலவில், தனியார் ஆம்னி பேருந்துகள் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு உள்ளது.இங்கு உணவகங்கள், தங்குமிடங்கள், ஒப்பனை அறைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. ஒரே நேரத்தில், 150 பேருந்துகள் நிறுத்தும் வசதிகள் உள்ளன. தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளை நிறுத்துவதற்காக, இது அமைக்கப்பட்டு உள்ளது.அதேபோல, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் 16 ஏக்கர் பரப்பளவில், 15 கோடி ரூபாய் செலவில், நுாற்றாண்டு காலநிலை பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.இதில் தொல்லியல் விளக்க மையம், அகழிகள், மழைநீர் குளங்கள், மரத்தோட்டம், சிறுவர் விளையாட்டு பூங்கா, திறந்தவெளி அரங்கம், கண்காட்சி மேடைகள் என, பல்வேறு பொழுதுபோக்கு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.அதுமட்டுமல்லாமல், கோயம்பேடு மொத்த விற்பனை சந்தை வளாகத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் மருத்துவ சிகிச்சை மையம் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இங்கு மருத்துவர்கள் ஆலோசனை அறை, செவிலியர்கள் தனி அறை, மூன்று மருத்துவ படுக்கை உள்ளடக்கிய அவசர சிகிச்சை பிரிவு, 24 மணிநேரமும் இயங்கக்கூடிய மருந்தகம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மருத்துவ சிகிச்சை மையத்தை, தகுந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை கொண்டு நடத்துவதற்கு, 'அப்பல்லோ' மருத்துவ குழுமம் முன்வந்துள்ளது.சி.எம்.டி.ஏ., வாயிலாக செயல்படுத்தப்பட்டு உள்ள இந்த மூன்று திட்டங்களையும், தலைமை செயலகத்தில் இருந்தபடி முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பரசன், சேகர்பாபு, தலைமைச்செயலர் முருகானந்தம், வீட்டுவசதி துறை செயலர் காகர்லா உஷா, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, அப்பல்லோ மருத்துவமனை துணை தலைவர் ப்ரித்தா ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sivagiri
டிச 08, 2024 19:48

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் , பிளாட்பாரம் முழுக்க முழுக்க நூற்றுக்கணக்கான பிச்சைக்காரர்கள் ஆக்கிரமிப்பில்தான் இருந்தது , அங்கேயே பிரீயாக டாய்லெட் பாத்ரூம் , தூக்கம் , சாப்பாடு வருமானம் , எல்லாம் . . . . கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டும் , பூங்காவும் அது போல ஆகி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் . . .


Sampath Kumar
டிச 08, 2024 12:16

நல்லது தென் மாவட்ட மக்களின் அழிச்சல் சற்று குறையும் வாழ்த்துக்கள்