உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஓ.எம்.ஆரில் அவசரகதியில் சாலை அமைத்து ரூ.40 கோடி வீணடிப்பு மழையில் சீரமைப்பு பணி செய்ததால் மீண்டும் சேதம்

ஓ.எம்.ஆரில் அவசரகதியில் சாலை அமைத்து ரூ.40 கோடி வீணடிப்பு மழையில் சீரமைப்பு பணி செய்ததால் மீண்டும் சேதம்

சென்னை: ஓ.எம்.ஆரில் மெட்ரோ ரயில் பணி முடிந்த பகுதிகளில், சாலை சீரமைப்பு பணிகளை மழை முடிந்தபின் துவங்க நலச்சங்கங்கள் அறிவுறுத்தியும், அவசரமாக செய்ததால், ஒரே மழையில் சாலை பல்லிளித்தது. சீரமைப்பு பணிக்காக மெட்ரோ ரயில் நிர்வாகம் வழங்கிய, 40 கோடி ரூபாயை, நெடுஞ்சாலைத்துறை வீணடித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பழைய மாமல்லபுரம் சாலை எனும் ஓ.எம்.ஆரில், இந்திரா நகர் முதல் சிறுசேரி வரை, 20 கி.மீ., மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளுக்காக, மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம், இச்சாலை ஒப்படைக்கப்பட்டது. இதில் பணி முடிந்த, 3.5 கி.மீ., சாலை சீரமைப்புக்காக, நெடுஞ்சாலைத்துறையின் சாலை மேம்பாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. சேதமடைந்து, குண்டும் குழியுமான இச்சாலையை சீரமைக்க, 40 கோடி ரூபாயை, ஆகஸ்ட் மாதம், மெட்ரோ ரயில் நிர்வாகம் வழங்கியது. இத்தொகையில் புதிதாக தார் சாலை, மைய தடுப்பு, அணுகு சாலை அமைக்க முடிவானது. இதையறிந்த ஓ.எம்.ஆர்., பகுதி நலச்சங்க நிர்வாகிகள், 'பருவமழை முடியும் வரை பள்ளமான பகுதிகளை தற்காலிகமாக சீரமையுங்கள். மழைக்காலம் முடிந்த பின் முழுமையாக சாலை அமைக்கலாம்' என, கோரிக்கை வைத்தனர். ஆனால், சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள், அவசர அவசரமாக ஒப்பந்தம் விட்டு, கடந்த மாதம் இறுதியில் சாலை சீரமைப்பு பணியை துவக்கினர். பணி துவங்கியபோதே அவ்வப்போது மழை பெய்த நிலையில், அணுகு சாலையில் பதிக்கப்பட்ட சிமென்ட் கற்கள் பெயர்ந்தன. தொடர்ந்து, ஓ.எம்.ஆரில் பிரதான ஆறுவழி தார் சாலையையும் சீரமைத்தனர். தீபாவளிக்கு பின் பெய்த ஒரே நாள் மழைக்கே, இச்சாலையின் பல இடங்கள் குண்டும் குழியுமாக மாறின. துரைப்பாக்கம், காரப்பாக்கம் பகுதியில் சாலை மோசமடைந்ததோடு, அவசரகதியில் அமைத்ததால், மைய தடுப்பும் பிடிமானம் இல்லாமல் உள்ளது. இதனால், 40 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டு விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, ஓ.எம்.ஆர்., பகுதி நலச்சங்க நிர்வாகிகள் கூறியதாவது: ஓ.எம்.ஆர்., உருவாக்கியபோது அமைத்த அணுகு சாலையே மிகவும் நன்றாக இருந்தது. சில இடங்களில் மட்டும் சேதமடைந்திருந்தன. அதை சீரமைத்திருந்தாலே போதும். தற்போது மொத்தமாக பெயர்ந்து, சாலை சீரமைக்கின்றனர். அதுவும், மழையில் பணி நடந்ததால், தார் கலவையில் பிடிமானம் கிடைக்காமல், சாலை பெயர்ந்து வருகிறது. இரவில் அமைத்த தார் சாலையில், மறுநாள் பகலில் பள்ளம் விழுந்தது. மழைநீர் தேங்கும் பகுதிகளில், நீரோட்டம் பார்த்து சாலை அமைக்காததால், சமீபத்திய மழையில் வெள்ளம் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். அணுகு சாலையும் சமமாக அமைக்காமல், கரடு முரடாக உள்ளது. இதனால், மெட்ரோ ரயில் நிர்வாகம் வழங்கிய, 40 கோடி ரூபாய் வீணடிக்கப்படுகிறது. மழை முடிந்தபின் பணி துவங்கி இருந்தால், சாலையின் ஆயுள் காலம் அதிகரித்திருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர். நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் அவசரமாக பணியை துவங்கியதால், இதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. வரும் காலத்தில் இதுபோல் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர். மழைக்கு முன் சாலை சின்னா பின்னம் போக்குவரத்துக்கு மாநகராட்சி தடை சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், வடகரை சந்திப்பு அருகே துவங்கும் மாதவரம் நெடுஞ்சாலை, 7 கி.மீ., பயணித்து, மாதவரம் சின்ன ரவுன்டானா அருகே வடக்கு உள்வட்ட சாலையில் இணைகிறது. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட எல்லைகளுக்குள் இந்த சாலை பயணிக்கிறது. இந்த சாலையில், ஆறு மாதங்களாக, மழைநீர் கால்வாய், பாதாள சாக்கடை குழாய் புதைக்கும் பணிகள் நடந்தன. இதனால், சாலைகள் மோசமான நிலைக்கு மாறின. கடந்த மாதம் மூன்று கோடி ரூபாய் ஒதுக்கி, சாலை சீரமைப்பு பணிகள் நடந்தன. பாதாள சாக்கடை குழாய்கள் புதைக்கப்பட்ட பள்ளங்களை, முறையாக கான்கீரிட் கலவை கொட்டி மூடாமல், தார்சாலை அமைக்கப்பட்டது. கனரக வாகனங்களின் தொடர் போக்குவரத்தால், இந்த சாலையில் மீண்டும் பள்ளங்கள் உருவாகின. சமீபத்திய மழையால், புதிதாக போடப்பட்ட தார்சாலை முழுதும் காணாமல் போய்விட்டது. சின்னாபின்னமாக சாலை மாறியுள்ளதால், விபத்துகள் நடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், சாலையின் ஒருபகுதியில் தடுப்பு வைத்து, போக்குவரத்தை மாநகராட்சி தடை செய்துள்ளது. இதனால், வாகனங்கள் ஒரு வழிப்பாதையில் தள்ளாடியபடியே பயணிக்கின்றன. ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை