45 நிமிடத்துக்கு ஒரு மின்சார ரயில் பகல் நேரங்களில் பயணியர் அவதி
சென்னை, சென்னையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, வேளச்சேரி தடத்தில், 450க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.இவற்றில், தினமும் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். காலை 8:30 மணி முதல், 10:30 மணி வரையிலும், மாலை 6:00 மணி முதல் 8:00 மணி வரையிலும், பீக் ஹவர்களில் எட்டு முதல் 10 நிமிடங்களுக்கு ஒரு மின்சார ரயில் இயக்கப்படுகிறது.இது தவிர, மற்ற நேரங்களில், பெரும்பாலும் 45 நிமிடங்கள் வரை பயணியர், ரயில் நிலையங்களில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.போதிய ரயில்கள் இல்லாததால், பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர். பராமரிப்பு பணி காரணமாக, புறநகர் மின்சார ரயில் சேவையும் அடிக்கடி ரத்து செய்யப்படுகிறது.இது குறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:சென்னை புறநகரில் வசிப்போரில், பெரும்பாலானோர் மின்சார ரயில்களை நம்பியே இருக்கின்றனர். ஆனால், சீரான மின்சார சேவை இல்லாததால், பயணியர் அவதிப்படுகின்றனர்.சென்ட்ரல் - ஆவடி, அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி, சூலுார்பேட்டை, கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில், அலுவலக நேரமல்லாத மற்ற நேரங்களில், தற்போது 30 முதல் 45 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.முன்பு, 20 நிமிடங்களுக்கு ஒரு ரயில் சேவை இருக்கும். மேலும், சில இடங்களில் தொழில்நுட்ப கோளாறுகளால் ஏற்படும் ரயில் தாமதம் போன்ற அறிவிப்புகளும், ரயில் நிலையங்களில் வெளியிடுவதில்லை. இதனால், மின்சார ரயில்களுக்காக, பயணியர் அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், பல்வேறு இடங்களில் பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால், மின்சார ரயில்களின் நேரத்தை, சில மாதங்களுக்கு முன் மாற்றம் செய்திருந்தோம்.தற்போது, பணிகள் முடியும் நிலையில் உள்ளன. எனவே, அடுத்த சில மாதங்களில், கூடுதல் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.