சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட ஐந்து மாவட்ட வெள்ள தடுப்பு பணிகளுக்கு அரசு ஒதுக்கிய, 30 கோடி ரூபாய் போதாது என, நீர்வளத்துறை கணக்கு போட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க, மேலும் 25 கோடி ரூபாய் ஒதுக்கும்படி, விரிவான திட்ட அறிக்கை தயாரித்துள்ளது. வடகிழக்கு பருவ மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலுார் ஆகிய ஐந்து மாவட்டங்களும், ஆண்டுதோறும் பாதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து, மக்கள் படகுகளில் இடம்பெயரும் சம்பவங்களும் தொடர்கின்றன. எனவே, பருவமழை துவங்கும் முன், இம்மாவட்டங்களில் உள்ள அடையாறு, கூவம், பகிங்ஹாம் கால்வாய், கொசஸ்தலையாறு, ஆரணியாறு, வெள்ளாறு உள்ளிட்ட நீர்வழித்தடங்களில், துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆகாயதாமரை உள்ளிட்ட புதர்களை அகற்றுதல், கரைகளை பலப்படுத்துதல் போன்ற பணிகளும் நடக்கின்றன. இந்த நிலையில், சென்னை மண்டல நீர்வளத்துறை வாயிலாக, இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, நடப்பாண்டு ஜூலையில் 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில், பல்வேறு நீர்வழித்தடங்களில் ஆங்காங்கே துார்வாரும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், முதல்வர் ஸ்டாலின் பல்வேறு பகுதிகளில், வெள்ள தடுப்பு பணிகளை பார்வையிட்டார். அடையாறு முகத்துவாரத்தில் ஆய்வு செய்தபோது, பணிகள் சரியாக நடக்காததால் அதிருப்தியான முதல்வர், 'இரண்டு நாட்களில் முகத்துவாரம் துார் வாரும் பணியை முடிக்க வேண்டும்' என, 'கெடு' விதித்தார். துணை முதல்வர் உதயநிதி, தலைமை செயலர் முருகானந்தமும் ஆங்காங்க ஆய்வு நடத்தி, அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தனர். இதையடுத்து, துார்வாரும் பணிகளில் சுணக்கம் காட்டி வந்த ஒப்பந்ததாரர்கள் சற்று கவனம் செலுத்தி வருகின்றனர். நீர்வளத்துறை அதிகாரிகளும், வெள்ள பாதிப்பு விவகாரம் என்பதால், கூடுதல் நிதியை அரசிடம் இருந்து பெற திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து, 25 கோடி ரூபாய்க்கு கூடுதல் திட்ட மதிப்பீட்டை, சென்னை மண்டல நீர்வளத்துறையினர் தயாரித்துள்ளனர். திட்ட மதிப்பீடு விபரங்களை, நீர்வளத்துறை செயலர் ஜெயகாந்தன் வாயிலாக, நிதித்துறைக்கு அனுப்பி ஒப்புதல் பெற, அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். புயல் உள்ளிட்ட இயற்கை சீற்ற பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு தனியாக அரசு நிதி ஒதுக்க வேண்டும் எனவும், அதிகாரிகள் வலியுறுத்த உள்ளனர். எது எப்படியோ, நீர்வளத்துறையின் இந்த செயல்பாடுகளால், சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்காமல் இருந்தால் சரி என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.