கடை ஒப்படைக்க தாமதமானதால் ரூ.1.47 கோடியை திருப்பி தர உத்தரவு
சென்னை:வண்டலுாரில், உரிய காலத்தில் கடையை ஒப்படைக்காத நிறுவனம், அதற்காக வசூலித்த 1.47 கோடி ரூபாயை வட்டியுடன் திருப்பித்தர வேண்டும் என, ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வண்டலுாரில், 'மெட்ரோ லைன் புரோமோட்டர்ஸ்' நிறுவனம், வணிக வளாகம் கட்டி வருகிறது. இதில் கடை ஒதுக்கீடு பெற, ஏ.செல்வராஜ் அருணாச்சலம், பெருமாள் ஆகியோர் பணம் செலுத்தினர். கடந்த, 2010ல் அவர்கள் ஒப்பந்தம் செய்து, அதற்காக 1.47 கோடி ரூபாயை செலுத்தினர். ஆனால், குறிப்பிட்ட காலத்தில் அந்நிறுவனம், கடைகளை ஒப்படைக்கவில்லை. இது குறித்து பணம் செலுத்தியவர்கள், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் புகார் அளித்தனர். இந்த புகார் தொடர்பாக ரியல் எஸ்டேட் ஆணைய உறுப்பினர்கள், சுப்ரமணியன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், கட்டுமான நிறுவனம் கடையை ஒப்படைக்கவில்லை என்பது உறுதியாகிறது. எனவே, மனுதாரர்கள் செலுத்திய 1.47 கோடி ரூபாயை கட்டுமான நிறுவனம் வட்டியுடன் திருப்பித்தர வேண்டும். இத்தொகைக்கு, ஆண்டுக்கு, 10.85 சதவீதம் என்ற அடிப்படையில் வட்டியை கணக்கிட்டு, 30 நாட்களுக்குள் கட்டுமான நிறுவனம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.