வண்ணை வியாபாரிகள் கோரிக்கை நடைபாதை பணி தற்காலிக நிறுத்தம்
வண்ணாரப்பேட்டை:சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் பல்வேறு பணிகள் நடக்கின்றன. அந்த வகையில், வண்ணாரப்பேட்டை, எம்.சி., சாலையில் 28 கோடி ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய நடைபாதை வளாகம் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.இதில், வண்ணாரப்பேட்டை, பி.எஸ்.என்.எல்., ஜங்ஷன் துவங்கி சிமென்ட்ரி சாலை ஜங்ஷன் வரை, 800 மீட்டர் நடைபாதை வளாகம் அமைக்கப்பட உள்ளது.இதற்காக, சாலைகளில் இருபுறமும் பள்ளங்கள் தோண்டி, கழிவுநீர் மற்றும் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி, மின்சாரம், தொலைத்தொடர்பு கேபிள் செல்ல பிரத்யேக குழாய்கள், புதிய மழைநீர் வடிகால்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள், மின் வாரியம் மற்றும் குடிநீர் வாரிய உயரதிகாரிகள் மேற்பார்வையில் நடந்து வருகின்றன. ஒன்றரை ஆண்டுகளில் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி, பொது மக்களின் நலன் கருதி, வரும் அக்., 1ம் தேதி முதல் அக்., 31ம் தேதி வரை 'ஸ்மார்ட் சிட்டி' பணிகளை நிறுத்தி வைக்க வேண்டுமென, வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோடு, ஜி.ஏ.ரோடு சுற்றுவட்டார வியாபாரிகள் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோடு, ஜி.ஏ.ரோடு சுற்றுவட்டார வியாபாரிகள் நலச்சங்க தலைவர் தமிமுன் அன்சாரி கூறியதாவது:தீபாவளி பண்டிகையையொட்டி, வியாபாரிகளின் நலன் கருதி வரும் அக்., 1ம் தேதி முதல் அக்., 31ம் தேதி வரையும்; பொங்கல் பண்டிகையையொட்டி, டிச., 15ம் தேதி முதல் ஜன., 15ம் தேதி வரையும், 'ஸ்மார்ட் சிட்டி' பணிகளை நிறுத்தி வைக்க, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ராயபுரம் எம்.எல்.ஏ., ஐட்ரீம் மூர்த்தி ஆகியோரிடம் மனு அளித்துள்ளோம். அவர்கள் வியாபாரிகளின் நலன் கருதி பணிகளை ஒத்திவைப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், செப்., 30ம் தேதிக்குள் சாலையின் இரு புறமும் தோண்டப்பட்டு பள்ளங்கள் மூடப்படும் என தெரிவித்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.