மெட்ரோ ரயில் சுரங்க பணியில் மீத்தேன் வாயு கசிந்ததால் பீதி
சென்னை:சென்னை மெட்ரோ ரயில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி நான்காவது வழித்தடத்தில், சுரங்கம் தோண்டும் பணியின்போது, மீத்தேன் வாயுக்கசிவு ஏற்பட்டதால், சுரங்கப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.சென்னை மெட்ரோ ரயிலின், இரண்டாம்கட்ட திட்டத்தில், 63,246 கோடி ரூபாயில், 116.1 கி.மீ., துாரத்துக்கு, மூன்று வழித்தடங்களில் பணிகள் நடக்கின்றன.இதில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி நான்காவது வழித்தடத்தில், பல்வேறு இடங்களில், பணிகள் நடக்கின்றன.இந்நிலையில், மயிலாப்பூர் கச்சேரி சாலையில், கலங்கரை விளக்கத்தில் இருந்து, திருமயிலை, பாரதிதாசன் சாலை, போட் கிளப் நோக்கிய வழித்தடத்துக்காக, இரண்டு இயந்திரங்கள் வாயிலாக, 18 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் தோண்டும் பணிகள் நடக்கின்றன.பணியாளர்கள், கச்சேரி சாலை பகுதியில், சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு வாயு கசிவு ஏற்படுவதை அறிந்து, நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.அங்கு நடத்திய ஆய்வில், மீத்தேன் மற்றும் கார்பன் மோனாக்சைடு வாயுக்கள், 10 பி.பி.எம்., அளவில் கலந்திருப்பதை கண்டறிந்தனர்.இதனால் ஆபத்து இல்லா விட்டாலும், சுரங்கத்துக்குள் புதிய காற்று செலுத்தப்பட்டு, பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. வாயு கசிவு குறித்த விசாரணை நடக்கிறது.