மின் கேபிள் பதிப்பு பணி பாதியில் நிறுத்தம் பள்ளத்தை மூடாததால் வேளச்சேரியில் பீதி
வேளச்சேரி, வேளச்சேரி விரைவு சாலையில் இருந்து, ஆதம்பாக்கம் நோக்கி செல்லும் மருதுபாண்டி சாலை, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு சாலை, 40 அடி அகலம் உடையது. இருவழி பாதையான இந்த சாலையில், அதிகளவில் வாகனங்கள் செல்கின்றன.ஆதம்பாக்கத்தில் இருந்து ராஜ்பவன் துணைமின் நிலையத்திற்கு, அதிக திறன் உடைய மின் கேபிள் பதிக்க, இந்த சாலையில், மூன்று மாதங்களுக்கு முன் 5 அடி அகலத்தில் பள்ளம் தோண்டப்பட்டது.அடிக்கடி விபத்து நடக்கும் பகுதியாக உள்ளதால், கேபிள் பதித்த பகுதியை உடனே மூட வேண்டும் என, மின் வாரியத்திடம், மாநகராட்சி வலியுறுத்தியது.கேபிள் பதிப்பில் ஏற்பட்ட நிர்வாக குளறுபடியால், பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால், பள்ளம் தோண்டிய பகுதிகள் அப்படியே விடப்பட்டுள்ளதால், விபத்து அபாயம் நிலவுகிறது.தற்போது, அடிக்கடி மழை பெய்வதால், பக்கவாட்டு மண் சரிந்து வாகனங்கள் பள்ளத்தில் விழுந்துள்ளன.இரவு மின் தடையின்போது, பள்ளம் இருப்பது தெரியாமல் புதிதாக வரும் பாதசாரிகள், வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்குகின்றனர். சாலையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, பள்ளத்தை மூடி சீரமைக்க வேண்டும் என, பகுதிமக்கள் கூறினர்.மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'கேபிள் இணைப்பில் சர்வர் சோதனை நடப்பதால் தாமதம் என, மின்வாரிய அதிகாரிகள் கூறினர். விரைந்து பள்ளத்தை மூட வலியுறுத்தி உள்ளோம்' என்றனர்.